சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள்
பட்டியலிலிருந்தும் கட்சியில் இருந்தும் என்.சின்னத்துரை, ஒரே நாளில்
நீக்கப்பட்டதற்கு, அவர் மீதான ஊழல் புகாரே காரணம் அதிமுக வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும், தூத்துக்குடி மாவட்ட
எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராகவும், அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள்
பாசறை இணை செயலாளராகவும் இருந்து வந்தவர் என்.சின்னத்துரை.
கடந்த முறை இவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பொறுப்பில் இருந்தபோது,
மாவட்ட பஞ்சாயத்து நிதியை,பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கினார்.
பஞ்சாயத்து நிதியை பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கக்கூடாது என்ற விதி
தெரிந்திருந்தும் அவர் ஒதுக்கியிருப்பதாக புகார் எழுந்தது. மேலும், இதில்
ரூ.2 கோடி ஊழல் நடந்ததாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, பட்டினம் கணேசன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில்
என்.சின்னத்துரை மீது வழக்கு தொடுத்தார். இந்த நிலையில், என்.சின்னத்துரையை
ராஜ்யசபா வேட்பாளராக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து
அவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பொறுப்பை நேற்று ராஜினாமா செய்தார்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமையன்று கணேசன் மீண்டும் மதுரை உயர்
நீதிமன்றத்தில் ஏற்கனவே,சின்னத்துரை மீது கொடுத்த மனு மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். இந்த தகவல் அ.தி.மு.க.
தலைமைக்கு தெரிய வர எம்.சின்னத்துரை மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.
எம்.பி. தேர்தல் வேட்பாளரில் இருந்து தூக்கப்பட்ட, என்.சின்னத்துரை
அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments