24 மணி நேரமும் கரண்ட் கொடுப்பதாக இருந்தால் தமிழக அரசுக்கு ரூ. 60,000 கோடி தேவைப்படுமாம்!

சென்னை: தமிழக மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டுமா்னால் தமிழக அரசுக்கு ரூ. 60,000 கோடி தேவைப்படுமாம். மின்சார நிபுணர்கள் இப்படிக் கூறியுள்ளனர். ஆனால் அந்த அளவுக்கு தமிழக அரசிடம் பணமும் இல்லை, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லையாம். எனவே இது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றும் அவர்கள் பீதியைக் கிளப்புகிறார்கள். இவ்வளவு பணம் செலவழித்து அனல் மின் நிலையங்களை அதிக அளவில் உருவாக்குவதன் மூலம் மட்டுமே தமிழகத்தின் மின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து 24 மணி நேரமும் மின் விநியோகத்தை தடையில்லாமல் தர முடியுமாம்.

அதிகரித்த மின் தேவை...
 
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் தேவை பெருமளவில் அதிகரித்து விட்டது. ஆனால் அதற்கேற்ற திட்டமிடல்கள் சுத்தமாக இல்லையாம். இதனால்தான் தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

தொழில் வளர்ச்சி.. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி
 
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தொழில் துறை நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல நிறுவனங்கள் இங்கு வந்துள்ளன. அதை விட முக்கியமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவில் வந்து குவிந்துள்ளன. ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மின் நுகர்வைப் பற்றி சரியாக கணிக்காமல், முறையாக திட்டமிடாமல் போனதால்தான் மின் தட்டுப்பாடு இந்த அளவுக்கு அதிகரிக்க முக்கியக் காரணமாம்.

அரைகுறையாக நிற்கும் மின் திட்டங்கள்
 
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மின் திட்டங்களும் அரைகுறையாக முடியாமல் தொங்கிக் கொண்டுள்ளன. பல வருடங்களாக இவை இழுபறியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிக அளவில் அனல் மின் நிலையங்கள் தேவை
 
தமிழகத்தின் மின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய அதாவது 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமானால் நிறைய அனல் மின் நிலையங்கள் தேவைப்படுமாம். இவற்றுக்காக குறைந்தது ரூ. 60,000 கோடி வரை தேவைப்படுமாம்.

8000 மெகாவாட் மின்சாரம் கண்டிப்பாக தேவை
 
மேலும் புதிய மின் நிலையங்கள் மூலம் தங்கு தடையில்லாமல் 8000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை நீக்க முடியுமாம்.

ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கு ரூ. 6.5 கோடி
 
அனல் மின்நிலையத்தில் ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ரூ. 6.5 கோடி செலவாகுமாம். மேலும் ஒரு முழுமையான அனல் மின் நிலையத்தை அமைக்க குறைந்தது 5 ஆண்டுகள் தேவைப்படும்.

மின்சாரம் அதிகரிக்காவிட்டால் முதலீடுகள் பறிபோகும்
 
தமிழக அரசு உடனடியாக சுதாரித்து, தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு, துரித கதியில் மின் உற்பத்தியை அதிகரிக்க முயலாவிட்டால், மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு பறிபோகும் வாய்ப்புள், அபாயங்கள் அதிகமாக உள்ளன.

தொங்கலில் நிற்கும் 3300 மெகாவாட் மின் திட்டங்கள்
 
தமிழகத்தில் உடன்குடியில் ஒன்றும், எண்ணூரில் இரண்டுமாக 3 மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் மொத்தம் 3300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால் இந்தத் திட்டங்கள் இன்னும் முடியாமல் தொங்கலில் நிற்கின்றன. ஆனால் இவற்றை வேகப்படுத்தி முடிப்பதாக இருந்தால் கூட குறைந்தது இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள்.

அடுத்த 10 ஆண்டுகளில் பற்றாக்குறை 3000 மெகாவாட் ஆகும்
 
அடுத்த ஐந்து அல்லது 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் பற்றாக்குறை மேலும் அதிகரித்து 3000 மெகாவாட் ஆக உயரும் என்றும் நம்பப்படுகிறது.

காற்றையும், சூரியனையும் நம்பி
 
தமிழகம் பெரும்பாலும் காற்றாலை மின்சாரத்தைத்தான் பெரிதும் நம்பியுள்ளது. இதுதான் சிக்கலாகி விடுகிறது. காற்று நின்று போனால், மின்சார உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க இதுவரை உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றும் நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

பாதிக்கு மேல் காற்றாலை மின்சாரம்தான்
 
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 13, 766 மெகாவாட் மின்சாரத்தில் கிட்டத்தட்ட 7000 மெகாவாட் மின்சாரத்தை நாம் காற்றாலை மூலம்தான் பெறுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து. சுதாரிக்குமா தமிழகம்...

Comments