2014ல் வாய்ப்பில்லை? 2019 தேர்தலில் வெற்றி பெற ராகுல் திட்டம்?

பெங்களூரு : ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் எனவும், இவர்களில் வெற்றி பெற்று பிரதமர் பதவிக்கு தேர்வாக போகிறவர் யார் எனவும் நாடே எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.
ஆனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் திட்டங்கள் அனைத்தும் 2019 தேர்தலில் வெற்றி பெறுவதில் அவரது கவனம் இருப்பதாக காட்டுகிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநில நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ராகுல் பேசி வருவதும், வரும் லோக்சபா தேர்தலில் இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்குமே அதிகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூறி வருவதும் நீண்ட கால திட்டமாகவே உள்ளது. ராகுலின் திட்டங்கள் செயல் வடிவம் பெற நீண்ட காலம் எடுக்கும். அவரது கூறுவது அனைத்தும், இந்த முறை காங்கிரஸ் நிச்சயமாக ஆட்சிக்கு வராது என்பதையும், அதனால் 2019 லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சியை தயார் செய்து வருகிறார் என்பதையும் காட்டுகிறது. வரும் அனைத்து தேர்தல்களில் மூத்த தலைவர்களை விட இளைஞர்களுக்கே அதிகம் சீட் தர வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார். தேர்தல் களத்தில் படித்த பெண்கள் உள்ளிட்ட இளைஞர்களை இறக்குவது சவாலான விஷயமாகவே மாநில தலைவர்கள் கருதுகின்றனர். அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் புதியவர்கள் தோல்வி அடைந்தாலும் அது அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அது கட்சியை நிலையை மேலும் மோசமடைய செய்யும். இருப்பினும், இளமை மற்றம் துடுப்பானர்களைக் கொண்ட காங்கிரசை உருவாக்கவே ராகுல் விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுலின் தேர்வுபடி காங்கிரஸ் வேட்பாளர்களை கர்நாடகாவில் நிறுத்தினால், தற்போதுள்ள 9 எம்.பி.,க்களில் 4 பேர் மட்டுமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் மகளிர் குழு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல் சந்தித்து பேசினார். அதன் பின்னர் மாநில தலைவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், இளைஞர்களின் தலைமையில் கட்சியை உருவாக்க அவர் முடிவு செய்துள்ளது தெளிவாகி உள்ளது. சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் போன்றர்களின் கருத்து கணிப்புக்களின் அடிப்படையில் கட்சியை உருவாக்கி, தேர்தலை எதிர்கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து ராகுல் கூறுகையில், அத்தகைய கருத்து கணிப்பாளர்கள் காங்கிரசில் சேரவோ, காங்கிரசை ஆதரிக்கவோ தேவையில்லை; ஆனால் அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது பேரணிகள் நடத்தினால் மட்டும் போதாது, வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும் எனவும், தெருவிற்கு தெரு கூட்டங்கள் போட்டு பிரசாரம் செய்ய வேண்டும் என கட்சியினரை ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார். மூலை முடுக்குகளில் தொண்டர்களும், பெரிய பொதுக் கூட்டங்களில் பெரிய தலைவர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் எனவும் ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இது தொகுதிவாரியான பெயர் பட்டியல் மட்டுமே. கட்சியின் அடிப்படையிலானது அல்ல. இவர்களில் சில தற்போதைய எம்.பி.,க்களும் இடம்பெற உள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments