ரூ.2 க்கு எம்.பி.3 பிளேயர்,ரூ.8க்கு எல்.இ.டி., டார்ச் லைட்: இறக்குமதி பொருள் மதிப்பீட்டில் ரூ.300 கோடி மோசடி
வெளிநாடுகளிலிருந்து, நம்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அப்பொருளின் மதிப்பில், 31 சதவீதம் சுங்க தீர்வையாக வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம், அரசிற்கு கணிசமான அளவு வருவாய் கிடைக்கிறது. இறக்குமதியாளர்கள், அதிகளவு லாபம் பெறும் பொருட்டு, பொருட்களின் மதிப்பை குறைவாக மதிப்பிட்டு வருவதாக சமீப காலமாக தொடர்ந்து வந்த புகார்களையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம், ரகசிய கண்காணிப்பை மேற்கொண்டது. அதில் கிடைத்துள்ள தகவல்கள் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக உள்ளன.
ஆறு மாத காலஅளவிலான இந்த கண்காணிப்பு நடவடிக்கையின் போது, சீனாவிலிருந்து இறக்குமதியாகியுள்ள 3,673 பொருட்களின் மதிப்பு, 1-9 சதவீத அளவிற்கே மதிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, சந்தையில், ரூ. 230 என்றளவிற்கு விற்பனையாகி வரும் எம்.பி.3 பிளேயரின் விலை ரூ. 1.83, ரூ.350 லிருந்து 450 வரை விற்கப்படும் எல்.இ.டி .டார்ச் விளக்கு மற்றும் எல்.இ.டி. விளக்கின் மதிப்பு ரூ.8, ரூ. 1,000 மதிப்பிலான எமர்ஜென்சி விளக்கின் மதிப்பு ரூ. 25, சந்தையில் ரூ. 4,299 மதிப்பிலான 4 ஜிபி திறன் கொண்ட டேப்லெட்டின் மதிப்பு ரூ.400 என குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதன் மூலம், ரூ.300 கோடி அளவிற்கு சுங்க தீர்வை மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மும்பையில் இயங்கி வரும் ரித்தி சித்தி கலெக்ஷன்ஸ் மற்றும் ஆயிஷா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், ரூ. 1,000 கோடி அளவிலான பொருட்களை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. அப்பொருட்களின் மதிப்புகளை குறைவாக மதிப்பிட்டு, ரூ.300 கோடி அளவிற்கு சுங்க வரி மோசடியில் ஈடுபட்டிருப்பது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயிஷா எலெக்ட்ரானிக்ஸ் உரிமையாளரான ஜாவேரி, வெளிநாடுகளிலிருந்து டெலிபோன் உள்ளிட்ட உபகரணங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ளார். இருப்பினும் இவருக்கு, பொருட்கள் இறக்குமதி குறித்த போதிய தகவல்கள் தெரியாது என்று கூறியுள்ளார். ஜவஹர்லால் நேரு துறைமுகத்திலிருந்து, வருவாய் புலனாய்வு இயக்குனரகம், 66 கண்டெய்னர்களில் இருநத இந்நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
ரித்தி சித்தி கலெக்ஷன்ஸ் மற்றும் ஆயிஷா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், இதன் உரிமையாளர்களாக உள்ளவர்கள், பெயரளவில் மட்டுமே உள்ளதாகவும், அவர்களின் பின்னால், வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் உள்ளது தெரியவந்துள்ளது.
Comments