2ஆண்டுகளில் 20மடங்கு: முதல்வர் வீர்பத்ரசிங்கின் வருமானம்

புதுடில்லி: ஊழல் புகாரில் சிக்கியுள்ள இமாச்சல பிரதேச முதல்வர் வீர்பத்ரசிங்கின் சொத்து மதிப்பு இரண்டு ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரித்திருப்பது குறித்து விளக்கம் அளிக்க வருமானவரி துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

வருமானம் அதிகரிப்பு:

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் முதல்வராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீர்பத்ரசிங்.
இவர் கடந்த 2010-ம் ஆண்டில் விவசாயம் மூலம் ரூ. 15 லட்சம் வருமானம் வந்துள்ளதாக தன்னுடைய வருமான வரி தாக்கலில் குறி்ப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து 2012-ம் ஆண்டு விவசாயத்தில் இருந்து கிடைத்த வருமானம் ரூ. 2 கோடியே 80 லட்சத்து 92 ஆயிரத்து 500 ஆக குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளில் 20 மடங்கு சொத்து மதிப்பு உயர்ந்த விதம் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அதில் ஆனந்த சவுகான் என்பவரால் நிர்வகிக்கப்பட்ட பழத்தோட்ட வருமானம இதில் சேர்க்கப்பட வில்லை என வீர்பத்ரசிங் கூறியுள்ளார்.

அறிக்கைகளில் முறைகேடு :

ஆனால் ஆனந்த் சவுகான் தனது வருமான வரித்தாக்குதலில் வீர்பத்ரசிங்கின் பண்ணை விவரங்கள் மற்றும் எல்.ஐ.சி., பரஸ்பரநிதி முதலீடுகள் குறித்த விவரங்களை அளித்துள்ளது தெரியவந்தது. வீர்பத்ரசிங் மற்றும் ஆனந்த்சவுகானின் அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகளை தெளிவு படுத்த வேண்டும் என சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. இவ்விசயத்தி்ல் வருமானவரித்துறை அதிகாரிகள் முறைகேடாக செயல்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

முதல்வர் மீது பா.ஜ., புகார் :

கடந்த 2003 -2007ல் முதல்வராக இருந்த வீர்பத்ரசிங் நீர்மின் நிலைய திட்டத்துக்கான ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கக தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியதாகவும், தொடர்ந்து 2012-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் தனியார் நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட பங்குகளை வைத்திருப்பதை மறைத்தது, மாண்டி லோக்சபா இடை தேர்தலில் முதல்வர் மனைவி பிரதீபாசிங் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவிலும் இதனை மறைத்துள்ளது குறித்து சி.பி.ஐ.,விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ., புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments