சபரிமலையில் மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது.
ஸ்ரீகோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது. தீபாராதனை முடிந்த சில நிமிடங்களில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது. ஜோதியும், நட்சத்திரமும் கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலைஇறங்கினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புல்மேட்டில் மகர ஜோதி தரிசனத்துக்கு பின்னர் நடைபெற்ற விபத்தில் 102 பேர் இறந்ததால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. விபத்துக்கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.மொத்தம் 540 டாக்டர்கள் 28 ஆம்புலன்சுகளுடன் தயார் நிலையில் இருந்தனர்.
வருமானம் உயர்வு: நடப்பு மண்டல- மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 181 கோடியாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டை விட 26 கோடி ரூபாய் அதிகமாகும். இந்த சீசன் முடிவடையும் போது மொத்த வருமானம் 200 கோடி ரூபாயை தாண்டும் என்று தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன்நாயர் கூறினார்.
Comments