ஜனாதிபதியின் கால தாமதத்திற்கு ஒரு பாடம்; வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேர் தூக்கு ரத்து: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகள்
15 பேருக்கு சுப்ரீம் கோர்ட் பெரும் தண்டனை தளர்வு வழங்கியிருக்கிறது.
இதன் மூலம் தூக்கு தண்டனை பெற்றவர்களது தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த கிரிமினல் குற்றவாளிகள்
தூக்கு தண்டனை பெற்றிருந்தனர்.
இவர்களின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்
என கோரி குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு செய்திருந்தனர். இந்த மனு
மீது முடிவு அறிவிப்பதில் ஜனாதிபதி அலுவலகம் கால தாமதம் செய்து வந்தது.
இதனை முக்கிய பிரச்னையாக எடுத்து சுப்ரீம் கோர்ட்டில் 20 குற்றவாளிகள் மனு
செய்திருந்தனர்.
தனிமை சிறையில் அடைப்பதா ? இந்த
மனுனை விசாரித்த தலைம நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இன்று இதற்கான
தீர்ப்பை அறிவித்தது. இதன்படி இன்று ஒரே நாளில் 15 குற்வாளிகள் மீதான மனு
முடிவுக்கு வந்தது. இந்த குற்றவாளிகள் மனுவில் முடிவு எடுப்பதில் நீண்ட
தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கான போதிய காரணங்கள் எதுவும் இல்லை. எனவே
கருணை மனு தாமதத்தின் அடிப்படையில் குற்றவாளிகளின் தூக்கு ஆயுளாக
குறைக்கப்படுகிறது. மேலும், இவர்கள் தனிமை சிறையில் அடைக்ககப்படுவது
தவிர்க்கப்பட வேண்டும். நீண்ட காலமாக சிறையில் வாடும் இவர்களுக்கு தேவையான
சட்ட உதவி செய்ய வேண்டும். இது போன்ற கைதிகள் தனிமைச்சிறையில்
அடைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். குற்றவாளிகளின் மன பாதிப்பை கோர்ட்
கவனத்தில் எடுத்து கொள்கிறது.
கருணை மனு
நிராகரிக்கப்பட்ட பின்னர் தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் செய்யக்கூடாது.
14 நாட்களுக்குள் மரணத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும் . கருணை மனு
நிராகரிக்கப்பட்ட விஷயம் குற்றவாளிக்கும் அவரது உறவினர்களுக்கும் அவசியம்
தெரிவிக்கப்பட வேண்டும். சிறையில் இவரது உறவினர்கள் சந்திக்க வாய்ப்பு
அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதன்படி தமிழகத்தில் வனத்துறை மற்றும் போலீசார் 22 பேரை கொன்ற வழக்கில்
தண்டனை பெற்ற மீசை மாதையன், ஞானப்பிரகாசம், சைமன், பிலேந்திரன், ஆகிய 4
பேர்களின் தூக்கு ஆயுளாக குறைக்கப்படுகிறது.
ராஜிவ் கொலையாளிகளுக்கும் விடிவு ? தற்போது தூக்கு தண்டனை பெற்று
வேலூர் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்ற குற்றவாளிகள்
தங்களின் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜிவ் குற்றவாளிகளான வேலூர் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன்,
பேரறிவாளன். ஆகியோர் 20 ஆண்டு காலமாக சிறையில் இருந்து வருகின்றனர்.
இவர்கள் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதும் இறுதி விசாரணை நடக்கும் போது தற்போது வழங்கப்பட்டுள்ள
தீர்ப்பின்படி ராஜிவ் குற்றவாளிகள் 3 பேரும் தங்களின் தண்டனையில் இருந்து
தப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
இன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒரு சாரார் வரவேற்றுள்ளனர். ஒரு சாரார் தங்களின் கவலைகளை தெரிவித்துள்ளனர்.
யார் இந்த நான்கு பேர் ?
* மீசைக்கார மாதையன்
வீரப்பன் கூட்டாளிகளில் மிக வயதானவர். இவரது வயது 65. பாலாறு தாக்குதல் வழக்கில் 31வது குற்றவாளி.
* சைமன்
வயது 45. வெடிகுண்டு நிபுணர். பாலாறு கண்ணி வெடி தாக்குதலுக்கு உதவியாக இருந்தவர். 18வது குற்றவாளி.
* ஞானப்பிரகாசம்
வயது 60. வீரப்பனின் நெருங்கிய கூட்டாளி. 30வது குற்றவாளி.
* பிலவேந்திரன்
வயது 60. சொந்த ஊர் நல்லூர். 32வது குற்றவாளி.
நடந்தது என்ன ?
1993 ஏப்.,9: கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு என்ற இடத்தில், சந்தன கடத்தல் வீரப்பனைத் தேடி, தமிழக போலீசார் பஸ்சில் சென்றபோது, வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள், நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் (எஸ்.பி., உள்பட 6 போலீசார்) 22 பேர் பலியாகினர். 14 பேர் காயம் அடைந்தனர்.
1993 ஜூலை: தமிழக அதிரடிப் படை நடத்திய தேடுதல் வேட்டையில், வீரப்பன் கூட்டாளிகள் 18 பேர் கைது செய்யப்பட்டனர். 6 பேர் கொல்லப்பட்டனர். 3 போலீசார் பலியாகினர்.
* இவர்களில் ஞானபிரகாசம், சைமன், பிலவேந்திரன், மீசை மாதையன் ஆகிய நான்கு பேருக்கும் மைசூர் கோர்ட் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
2004 ஜன.,: வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
* நான்கு பேரும், ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தனர்.
2013 பிப்., 13: நான்கு பேரின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் நிராகரிப்பு.
2014 ஜன., 21 ( இன்று ) : கருணை மனு மீதான நடவடிக்கை தாமதமானதால், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
Comments