மின்நுகர்வு 10,910 மெகாவாட் ஆக சரிவு: தமிழக தெர்மல் மின் உற்பத்தி குறைப்பு

மேட்டூர்: பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக, தமிழகத்தின் மின்நுகர்வு, நேற்று காலை, 10,910 மெகாவாட் ஆக சரிந்தது.
கடந்த, 2008ம் ஆண்டு, 8,500 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை கடந்த ஆண்டு, 12,000 மெகாவாட் ஆக அதிகரித்தது. நடப்பாண்டு கோடையில் மின்தேவை, 13,000 மெகாவாட்டை தாண்டும் நிலை உள்ளது. தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை கடந்த, 7ம் தேதி, 12,635 மெகாவாட் ஆக அதிகரித்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.


இதனால், நேற்று முன்தினம், 11,000 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை, நேற்று, 10,900 மெகாவாட் ஆக சரிந்தது. தமிழகத்தின் அனல்மின் நிலையங்களில், 2,970 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தின் மின்தேவை அதிகரித்ததால், தெர்மல்களில் கடந்த வாரம் அதிகபட்சமாக, 3,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறையால், மின்நுகர்வு நேற்று, 10,900 மெகாவாட் ஆக சரிந்தது. மின் நுகர்வு, 1,600 மெகாவாட் வரை சரிந்ததால், நேற்று தெர்மல்களின் மின் உற்பத்தி, 3,300 மெகாவாட் ஆக குறைக்கப்பட்டது. நேற்று, நீர்மின்நிலையங்களில், 700, காற்றாலைகளில், 570 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

Comments