ஹசாரே போராட்டம்:
'ஊழலில் ஈடுபடும், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை தண்டிக்கும் வகையில், லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட்டில் நிறைவேற்ற வேண்டும்' என, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே, 2011ல், டில்லி உள்ளிட்ட நகரங்களில், தொடர் போராட்டங்களை நடத்தினார். இந்த போராட்டங்களுக்கு, மக்களிடையே, எழுச்சி ஏற்பட்டதால், காங்., தலைமையிலான மத்திய அரசு, வேறு வழியில்லாமல், மசோதாவை நிறைவேற்ற முன்வந்தது. பல்வேறு குளறுபடிகளுக்கு பின், லோக்பால் மசோதா, 2011, டிசம்பரில், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. பின், ராஜ்யசபாவிலும், அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த மசோதாவில் உள்ள, சில முக்கிய அம்சங்களுக்கு, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட, பல கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த மசோதாவை திருத்தி தாக்கல் செய்யக்கோரி, அமளியில் ஈடுபட்டன. மசோதா மீது, நள்ளிரவு வரை விவாதம் நடந்தது. பின், ஓட்டெடுப்பின்போது, கடும் அமளி ஏற்பட்டதால், மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
தேர்வுக்குழு பரிந்துரை:
இதையடுத்து, ராஜ்யசபா தேர்வுக் குழுவுக்கு, மசோதா பரிந்துரைக்கப்பட்டது. தேர்வுக்குழு, சில பரிந்துரைகளை அளித்தது. இதில், சில பரிந்துரைகளுக்கு, பா.ஜ., சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, மாநிலங்களில், லோக்ஆயுக்தா அமைப்பதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, மாநிலங்களில் லோக்ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தும் விதிமுறைகள், மசோதாவிலிருந்து நீக்கப்பட்டன. அதேபோல், அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரத்தை, தீர்வாணையத்திடம் வழங்கும் வகையிலும், மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டது. குற்றச்சாட்டுக்கு ஆளான, அரசு ஊழியர்கள், முதல் கட்ட விசாரணை நடப்பதற்கு முன், தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க, அனுமதி மறுக்கும் பரிந்துரையும் நீக்கப்பட்டது. ராஜ்யசபா தேர்வுக்குழுவின், ஆய்வு முடிந்து, ஆறு மாதங்கள் ஆன நிலையில், இந்த மசோதா குறித்து, மத்திய அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இந்நிலையில், சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே, 'நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரிலேயே, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, வலியுறுத்தி, நான்கு நாட்களாக, உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்:
இதே பிரச்னையை முன்வைத்து, முன், அன்னா ஹசாரேயுடன் சேர்ந்து, போராட்டம் நடத்திய, அரவிந்த் கெஜ்ரிவால், 'ஆம் ஆத்மி' என்ற கட்சியை துவக்கி, டில்லி சட்டசபை தேர்தலில், கணிசமான தொகுதிகளை பிடித்து விட்டார். எனவே, லோக்பால் விவகாரத்தில், ஹசாரேயும், கெஜ்ரிவாலும், மேலும் ஆதாயம் அடையாமல் தடுக்கும் விதமாக, நடப்பு கூட்டத் தொடரிலேயே, இந்த மசோதாவை, ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய, மத்திய அரசு, அதிரடி முடிவு எடுத்தது.
திருத்தப்பட்ட மசோதா:
இதன்படி, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர், நாராயணசாமி, திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவை, ராஜ்யசபாவில், நேற்று தாக்கல் செய்தார். இது தொடர்பாக விவாதம் நடத்தி, மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், கடந்த முறை போலவே, இந்த முறையும், இந்த மசோதாவுக்கு, சமாஜ்வாதி கட்சி, முட்டுக்கட்டை போட்டது. 'விலைவாசி உயர்வு போன்ற முக்கிய பிரச்னைகள் உள்ளன. முதலில், அந்த பிரச்னைகளை விவாதியுங்கள்; அதற்கு பின், லோக்பால் மசோதா குறித்து விவாதிக்கலாம்' என, சமாஜ்வாதி கட்சியினர், அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கோஷம்:
இதையடுத்து, சபை ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகல், 3:30 மணிக்கு, மீண்டும் சபை கூடியபோதும், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள், மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும், தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிராக, கோஷம் எழுப்பினர். ராஜ்யசபா துணை தலைவர், குரியன், அவர்களை சமாதானப்படுத்த மேற்கொண்ட முயற்சி, பலன் அளிக்கவில்லை. இதனால், சபை, நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டும், அது குறித்து விவாதம் நடத்த முடியாமல், சபை ஒத்திவைக்கப்பட்டதால், அரசு தரப்பு, ஏமாற்றம் அடைந்துள்ளது. இனி, 16ம் தேதி தான், இதுகுறித்து, சபையில் விவாதம் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு, சமாஜ்வாதி கட்சி ஒத்துழைக்குமா என்பது, சந்தேகமே.
* லோக்பால் மசோதா, 2011ல், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
* அதே ஆண்டில், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அமளி காரணமாக, மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
* இந்த மசோதாவை ஆய்வு செய்த, ராஜ்யசபா தேர்வுக் குழு, மசோதாவில் திருத்தங்களை செய்து, 16 பரிந்துரைகளை அளித்தது.
*
ஊழல் வழக்கை விசாரிக்கும், சி.பி.ஐ., அதிகாரியை, மாற்றுவது தொடர்பான
பரிந்துரை உட்பட, இரண்டு பரிந்துரைகளை அரசு நிராகரித்து விட்டது.
* திருத்தப்பட்ட மசோதாவில், மாநிலங்களில், லோக்ஆயுக்தாவை நிறைவேற்ற வலியுறுத்தும் விதிமுறைகள் இடம்பெறவில்லை.
*
நடப்பு கூட்டத் தொடரில், ராஜ்யசபாவில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும்,
திருத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், மீண்டும், அதற்கு, லோக்சபாவின்
ஒப்புதல் பெற வேண்டும்.
சமாஜ்வாதி மிரட்டல்:
லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு, மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியால், அரசுக்கு வெளியில் இருந்து, ஆதரவு அளித்து வரும், சமாஜ்வாதி கட்சி, கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதுகுறித்து, அந்த கட்சியின், பொதுச் செயலர், ராம்கோபால் யாதவ் கூறியதாவது: லோக்பால் மசோதாவை விட, விலைவாசி உயர்வு, மிக முக்கிய பிரச்னை. எனவே, விலைவாசி உயர்வு பற்றித் தான், முதலில் விவாதிக்க வேண்டும். லோக்சபாவில், எங்கள் கட்சியை சேர்ந்த, 22 எம்.பி.,க்களின் ஆதரவு, காங்கிரஸ் அரசுக்கு உள்ளது. தற்போது, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிராக, ஆந்திர மாநில எம்.பி.,க்கள், லோக்சபாவில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு, 'நோட்டீஸ்' கொடுத்துள்ளனர். லோக்சபாவில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை நாங்கள், ஆதரிப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.
Comments