மீனவர் பிரச்சனையில் ஜெ. முட்டுக்கட்டை- கருணாநிதியால்தான் தீர்வு- சிங்கள அமைச்சர் பேச்சு

கொழும்பு: தமிழக மீனவர்கள் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா முட்டுக் கட்டை போடுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதி ஆட்சி அமைத்தால்தான் தீர்வு ஏற்படும் என்றும் இலங்கை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை அரசின் அதிகாரபூர்வ நாளேடான தினகரனில் வெளிவந்துள்ள ராஜித சேனரத்ன கருத்து: எமது நாட்டின் கடல் எல்லைக்குள் தமிழ்நாட்டு மீனவர்கள் உட் பட வெளிநாட்டு மீனவர்கள் எவரும் அத்துமீறி பிரவேசித்து எமது கடல் வளத்தை சூறையாடுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதிக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில் ஒரு தெளிவான நிலைப்பாடு இருக்கிறது. கருணாநிதியின் கட்சி தமிழ்நாட்டில் அரசாங்கத்தை அமைத்தால் இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெறும் மாநில தேர்தல்கள் முடிவு பெறும் வரை இந்திய மத்திய அரசாங்கம் இந்த விவகாரத்தில் தீர்க்கமான முடிவை எடுப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்தப் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் வரை இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றி அவற்றை இலங்கையில் தடுத்து வைக்கும் செயற்பாடு தொடர்ந்தும் கடுமையாக முன்னெடுக்கப்படும். எமது வளங்களை சூறையாடி வடபகுதி மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். இதேவேளையில் இந்தப்பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதற்கு காரணமாக இருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா இருநாட்டு மீனவர்கள் தாக்கப்படல், கைது செய்யப்படல் தொடர்பில் இம்மாத இறுதியில் முடிவு எட்டப்படும் என்று கூறியுள்ளார். இதற்கமைய தாம் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒன்றுக்கு இம்மாத இறுதியில் ஏற்பாடு செய்திருப்பதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை யின் அச்சுறுத்தலில் இருந்து காக்க கச்சத்தீவை மீட்பது ஒன்றே ஒரே தீர்வாக அமையும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமான பிரதேசம். தமிழக அரசு இதில் உறுதியாக இருக்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்புவரும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கும் ஜெயலலிதா, தற்போது இலங்கை கடல் எல்லையை அத்து மீறி கடந்த குற்றச்சாட்டின் பேரில் 88 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஜெயலலிதா சிறுபிள்ளைத்தனமாக இவ்விதம் தமிழக மீனவர்களையும் தமிழக வாக்காளர்களையும் ஏமாற்றுவதற்காகவே கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்ற ஆதாரமற்ற கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை, இந்திய அரசாங்கங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என்று இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவில் தங்கி களைப்பாறுவதற்கும் மார்ச் மாதத்தில் நடைபெறும் கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய பூஜைகளில் கலந்து கொள்வதற்கும் மாத்திரமே உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதை தெரிந்தும் தெரியாதவர் போல் ஜெயலலிதா அரசியல் நடத்துவதைப் பார்த்து நாம் வேறொன்றும் கூறுவதற்கில்லை. இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை ஒரு பெரும் தலையிடியை தோற்றுவித்துள்ளது. இந்திய மத்திய அரசாங்கம் முடிவெடுத்தால் ஒரு நொடிப் பொழுதில் தங்கள் கடல்பாதுகாப்பு படையினரின் உதவியுடன் இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி பிரவேசிப்பதையும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்பதையும் தடுத்து விடலாம். இந்தியாவின் பொதுத்தேர்தல் அடுத்தாண்டில் நடைபெறவுள்ள இவ்வேளையில் இந்திய மத்திய அரசாங்கம் இவ் விதம் கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுத்தால் ஜெயலலிதாவும், அவரை ஆதரிக்கும் சிறிய கட்சிகளும் அரசியலில் இலாபமடைந்து பொதுத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற காரணத்திற்காகவே மத்திய அரசாங்கம் இது விடயத்தில் இப்போது எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்து வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தினகரனில் ராஜித சேனரத்ன கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.

Comments