ராஞ்சி: தற்போது அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு லோக்பால் மசோதா அமைப்பு
சரியில்லை என்றும், ஹசாரேயின் கொள்கைகளும் சரியில்லை என்றும் , இவை
கோர்ட்டை கேள்விக்கூத்தாக்கி விடும் என்றும் சிறையில் இருந்து விடுதலையான
லாலுபிரசாத் யாதவ் சிறைவாசலில் கூறினார்.
கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிக்கியவர் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு
பிரசாத் யாதவ். போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 37 கோடியை சுருட்டினார் என்பது
குற்றச்சாட்டு.
இது தொடர்பான சி.பி.ஐ.,விசாரணையில் லாலு குற்றம்
புரிந்தார் என சிறப்பு கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து இவருக்கு
5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம்
30 ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு 70
நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அநுபவித்த லாலுவுக்கு சுப்ரீம் கோர்ட்
உத்தரவுப்படி இன்று ஜாமின் கிடைத்தது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிர்சா முண்டா சிறையில் இருந்து இன்று மதியம் விடுதலையானார்.
எத்தனை மோடி வந்தாலும் :
நிருபர்களுக்கு பேட்டியளித்த லாலு : எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் எப்போதும் உண்மையானவன் , நீதிதுறையின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. இதனால் தான் எனக்கு ஜாமின் கிடைத்துள்ளது. எனது மீது சி.பி.ஐ., தவறான வழக்கை பதிவு செய்துள்ளது. எனக்கு விளைவிக்கப்பட்ட அநீதியை ஆரம்பத்தில் இருந்து என்னால் விவரிக்க முடியாது. மதவாத சக்திகளுக்கு எதிராக போராட போகிறேன். மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டிய காலம் இது. ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். நாட்டை துண்டாட அனுமதிக்க கூடாது. நரேந்திர மோடி அல்ல , எத்தனை மோடி வந்தாலும், நான் எதிர்கொள்ள தயார். இவரை போன்ற மதவாத சக்தியை ஆட்சிக்கு வருவதை தடுப்பேன். இதற்கென நான் எந்த தியாகமும் செய்ய தயார்.
கோர்ட் நடவடிக்கை நாசம் :
லோக்பால் அமைப்பு சரியில்லை. இதில் ஊழல் வழக்கை விசாரிக்க அதிகாரிகள்
மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்கள் கொண்டிருப்பது ஏற்ககூடியதல்ல. அன்னா
ஹசாரேயின் இந்த யோசனை கலந்த லோக்பால் கோர்ட் நடவடிக்கையை நாசப்படுத்தி
விடும். இவர் நீதித்துறைய கேலிக்கூத்தாக்குகிறார். நீதித்துறையை விட
மேலானவர் என்ற நிலையை உருவாக்க முயற்சிக்கிறார். இவ்வாறு லாலு பிரசாத்
கூறினார்.
Comments