கெஜ்ரிவால் புது வகையான அரசியலை தந்துள்ளார்: அரசியல் வல்லுநர்கள் கருத்து

புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய வகையான அரசியலை நாட்டிற்கு தந்துள்ளதாகவும், உழைத்து களைத்த இந்திய மக்களை பலப்படுத்தும் விதமாக இந்த அரசியல் உருவெடுத்துள்ளதாகவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் டிவி.,யின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சச்சின் உள்ளிட்ட 25 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியலாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.



அரசியல் விவாதம் :

வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரச்னைகளும் தீர்வுகளும் என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அரசியல் குறித்த விவாதத்தின் போது பேசிய அமிர்தியா சென், அரவிந்த் கெஜ்ரிவாலை வெகுவாக பாராட்டினார். கெஜ்ரிவால் குறித்து பேசிய அவர் கூறியதாவது : பொருளாதார ரீதியாக சாமாணிய மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்துள்ள புதிய அரசியல் ஒரு வளர்ச்சி பாதையை ஏற்படுத்தி உள்ளது; அன்னா ஹசாரேவுடன் இணைந்து மக்களிடையே ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த கெஜ்ரிவால் அரசியலுக்கு வந்தது சரியான முடிவு; அன்னா ஹசாரே நீதித்துறைக்கு அப்பாற்பட்டதை நடத்த எண்ணுகிறார்; இது சரியானத அல்ல; அவர் கெஜ்ரிவாலுடன் அரசியலில் இணைவதே சரியானது; கெஜ்ரிவாலின் வெற்றி ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் தோல்வி; கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையில் அரசு செய்ய வேண்டியது என்ன என்பதை கெஜ்ரிவால் தெளிவுபடுத்தி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு ஆதரவு:

அமிர்தியா சென்னை தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரி, அமிர்தியா சென் கூறுவது போல் கெஜ்ரிவால் புதிய அரசியலை கொண்டு வந்துள்ளார் என்பது ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் இப்படிப்பட்ட நிலைப்பாடு கொண்ட மனிதர் தலைமையில் ஆட்சி அமைந்தால் அது பொருளாதார கொள்கைகளில் பின்னடைவையே ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிர்வாகி என்.ஆர்.நாராயண மூர்த்தி பேசுகையில், மற்ற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல் மக்களுக்கு தேவையான முக்கிய தகவல்களை கூறியும் குறைவாகன பணத்தை செலவிட்டும் கெஜ்ரிவால் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்; ஆனால் அவரது பேச்சு முதலாளித்துவத்தை முற்றிலுமாக எதிர்ப்பதாக உள்ளது; இவ்வாறு இல்லாமல் முதலாளித்துவமோ, சோசலிசமோ எதுவாக இருந்தாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு கெஜ்ரிவால் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
சாதனையாளர்களுக்கு விருது:

வெள்ளி விழா ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த விருத வழங்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கினார். அரசியல், அறிவியல், விளையாட்டு, கலை, இலக்கியம், கல்வி, தொழில்துறை, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்த பிரபலங்களுக்கு இந்த, வாழும் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. லியாண்டர் பயஸ், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஏ.ஆர்.ரகுமான், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.சுவாமிநாதன், முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ஜூபின் மேத்தா, ஒய்.கே.ஹமீது, விக்ரம் செத் உள்ளிட்ட 25 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பிரபலங்கள் கருத்து :


விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். சில பிரபலங்களின் கருத்துக்கள் :
லியாண்டர் பயஸ் : தன்னம்பிக்கையுடன் கடுமையான உழைப்பு வேண்டும்.
அமிதாப் பச்சன் : அடக்கமும், உண்மையும் முன்னேற்றத்திற்கு அவசியம்.
கபில் தேவ் : கனவு காணாமல் எதையும் அடைய முடியாது.
ரஜினிகாந்த் : கன்டெக்டராக இருந்து இந்தியாவின் 25 சாதனையாளர்களுள் ஒருவனாகி உள்ளேன்; அதிசயங்கள் நிகழும் என்பதற்கு என் வாழ்க்கையே உதாரணம். இந்த விருதை தமிழ் மக்களுக்கும், எனது குரு இயக்குனர் பாலச்சந்தருக்கும் அர்பணிக்கிறேன்.
ஷாருக்கான் : செயல்களின் மூலம் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்க வேண்டும்.
சச்சின் டெண்டுல்கர் : தோல்வியால் சோர்ந்து விடாமல் மீண்டும் எழுந்து, அடுத்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்.
எம்.எஸ்.சுவாமிநாதன் : நாட்டின் எதிர்காலம் வேளாண் வளர்ச்சியில் உள்ளது; ஆயுதங்களின் வளர்ச்சியில் அல்ல.
ரத்தன் டாடா : இந்தியாவின் வளர்ச்சியில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Comments