மினி பொதுத்தேர்தல்: சத்தீஸ்கரில், முதல்வர் ராமன் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சியும், டில்லியில், முதல்வர் ஷீலா தீட்ஷித் தலைமையிலான, காங்., ஆட்சியும், ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சியும் நடக்கின்றன.
தேர்தல் தேதி: 90 உறுப்பினர்களை உடைய, சத்தீஸ்கர் சட்டசபைக்கான தேர்தல், நவம்பர், 11 மற்றும் 19ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடந்தது. 230 உறுப்பினர்கள் உடைய, ம.பி., சட்டசபைக்கான தேர்தல், நவம்பர், 25ம் தேதியும், 200 உறுப்பினர்கள் அடங்கிய, ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், டிச., 1ம் தேதியும் நடந்தது. 70 உறுப்பினர்கள் அடங்கிய, டில்லி சட்டசபைக்கான தேர்தலும், 40 உறுப்பினர்கள் அடங்கிய, மிசோரம் சட்டசபைக்கான தேர்தலும், இன்று (டிச., 4ம் தேதி) நடந்தது.
மோடி-ராகுல் தீவிர பிரசாரம்: இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், பா.ஜ., கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். டில்லியில் காங்கிரஸ், பா.ஜ., மற்றும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியினருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ம.பி., சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது.
கருத்துக்கணிப்பு முடிவுகள்: ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து எந்த மாநிலங்களில், எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதற்கான கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தியா டுடே மற்றும் ஓ.ஆர்.ஜி., நடத்திய கருத்துக்கணிப்பில், ம.பி., மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ., மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம.பி.,யில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு 128 இடங்களும், காங்கிரசுக்கு 92 இடங்களும், பகுஜன் 9 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், சத்தீஸ்கரின் மொத்தமுள்ள 90 இடங்களில் பா.ஜ., 44 இடங்களையும், காங்கிரஸ் 41 இடங்களையும், பகுஜன் 2 இடங்களையும் பிடிக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள இடங்கள் 200. இதில் பா.ஜ., 130 இடங்களைப்பிடித்து ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 48 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும், பகுஜன் 4 இடங்களைப் பிடிக்கும் எனவும் தெரிகிறது. மற்றவர்கள் 17 இடங்களில் வெற்றி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
டில்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ., 29 இடங்களைப்பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். காங்கிரசுக்கு 21 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 16 இடங்களும் கிடைக்கும்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தமுள்ள 40 இடங்களில், காங்கிரஸ் 19 தொகுதிகளையும், மிசோரம் தேசிய முன்னணி 14 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments