காங்கிரசிற்கு இது சோகமான காலம்: நிதி அமைச்சர் சிதம்பரம் புலம்பல்

சிவகங்கை: ""அகில இந்திய அளவில், சோகமான கால கட்டத்தில் காங்கிரஸ் சிக்கியுள்ளது,'' என, சிவகங்கையில் நடந்த கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பேசினார்.

மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டம், சிவகங்கையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: தற்போது காங்., கட்சிக்கு சோகமான காலம்; அகில இந்திய அளவில் இச்சோகம் உள்ளது. கடந்த 10 ஆண்டு ஆட்சியில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
காலச் சூழலால் காங்., தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து மீள்வது குறித்து தலைவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பா.ஜ., புதிய தலைமையை முன்நிறுத்தி, வேகமாக இருப்பதை மறுக்க முடியாது. ராவணனுக்கு 10 தலைகள் இருப்பது போல, பா.ஜ., விற்கும் 10 முகம் உள்ளது; இவற்றில் ஒன்று, பா.ஜ., என்ற அரசியல் முகம். பத்து முகத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் உள்ளது. நமக்கும், பா.ஜ., விற்கும் போட்டி அல்ல; ஆர்.எஸ்.எஸ்.,- காங்.,க்கு இடையே தான் போட்டி. தமிழகத்தில் காங்., தனிமைப்படுத்தப்பட்டதா அல்லது தனிமைப்படுத்தினரா? என்பது கவலை அளிக்கிறது. கட்சி பதவி பறிபோனால், வாழ்க்கையே போனதாக நினைக்கக்கூடாது. முதியவர்கள், இளைஞர்களுக்கு வழி விடவேண்டும். நானும் வழிவிட்டுத்தான் ஆகவேண்டும். கட்சி பதவி வகிப்போர், தமிழில் நன்றாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்; தினமும் மக்களை சந்திக்க வேண்டும். பத்திரிக்கையாளர்களை அடிக்கடி சந்தித்து பேச வேண்டும், என்றார்.

நிருபர்களுக்கு "கெட் அவுட்':

சிதம்பரம் பேச ஆரம்பித்த போது, ""தயவு செய்து பத்திரிகையாளர்கள் இங்கிருந்து சென்று விடுங்கள்,'' என, மூன்று முறை வலியுறுத்தினார். இதனால், வெளியே நின்று அவரது பேச்சை குறிப்பெடுத்தனர். பேச்சை முடிக்கும்போது, ""காங்., நிர்வாகிகள் அடிக்கடி பத்திரிகையாளர்களிடம் கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்,'' என்றார். "நிருபர்களை அனுமதிக்க மறுத்த அமைச்சர், நமக்கு இதுபோல போதிப்பது, என்ன நியாயம்?' என, நிர்வாகிகள் பேசிக் கொண்டனர்.

Comments