மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக, வீடுகள் கட்ட, மாநில அரசு திட்டமிட்டது. இதற்காக, மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டது. மும்பையின் முக்கிய பகுதியான, கொலாபாவில் இந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டது. "1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த, நம் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு, இந்த குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படும்' என, மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கப்படாமல், அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, 2010ம் ஆண்டு, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், இதுகுறித்து விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. வழக்கு விசாரணையில், ஏராளமான அரசியல் தலைவர்களுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பது உறுதியானது. எனினும், மாநில அரசின் குறுக்கீடால், சி.பி.ஐ., யாரையும் கைது செய்யவில்லை. சி.பி.ஐ., யின் செயல்பாட்டை, மும்பை ஐகோர்ட் வன்மையாக கண்டித்தது. ஐகோர்ட்டின் கண்டனத்தை அடுத்து, 2012ல், எட்டு பேர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, கைது செய்தது. அதையடுத்து, இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, முன்னாள் நீதபதி, ஜே.ஏ.பாட்டீல் மற்றும் முன்னாள் மாநில தலைமைச் செயலர், பி. சுபர்ணியன் அடங்கிய, இரு நபர் குழுவை மாநில அரசு நியமித்தது. இந்த குழு நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஆதர்ஷ் குடியிருப்பு கட்டடத்தில் கட்டப்பட்டுள்ள, 102 வீடுகளில், 25 வீடுகள் முறைகேடான வகையில் தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 22 வீடுகள், அரசியல்வாதிகள்," பினாமி'களின் பெயரில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதர்ஷ் குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டுள்ள இடம், மாநில அரசுக்கு சொந்தமானது. அது, ராணுவத்திற்கோ அல்லது, மத்திய அரசுக்கு சொந்தமானது அல்ல. முறைகேடான வகையில் ஒதுக்கப்பட்ட வீடுகள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களின் பினாமிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில முன்னாள் முதல்வர்கள், சுஷில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக், அசோக் சவான் மற்றும் தற்போதைய முதல்வர், பிருத்விராஜ் சவான் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதர்ஷ் ஊழல் பற்றிய இருநபர் விசாரணைக் குழு அறிக்கை, மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆதர்ஷ் குடியிருப்பு மாநில அரசின் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதை மட்டும் மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
முன்னாள் முதல்வர்கள் மீதான குற்றச்சாட்டை ஏற்க மறுத்துள்ள அரசு, இந்த அறிக்கையை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, மாநில முன்னாள் முதல்வர், அசோக் சவானிடம், ஆதர்ஷ் ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த, கவர்னர், சங்கரநாராயணன் அனுமதி மறுத்துள்ள நிலையில், இரு நபர் விசாரணைக் குழு அறிக்கையை மாநில கேபினட் குழு நிராகரித்துள்ளது, எதிர்க் கட்சியினரை கொதிப்படையச் செய்துள்ளது.
Comments