அடுத்தாண்டு நடக்கவுள்ள பார்லிமென்ட்
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அ.தி.மு.க., வியூகங்களை வகுப்பதற்காக
சென்னையை அடுத்த வானகரத்தில், அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு
கூட்டம் இன்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான
ஜெயலலிதா உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "தமிழகத்திற்கு பாதகமாக
செயல்படுகின்ற மத்திய அரசு தூக்கி எறியப்பட வேண்டும். தமிழகத்திற்கு
நேசக்கரம் நீட்டுகின்ற, நட்புடன் செயல்படுகின்ற, தமிழக அரசுக்கு உதவி
செய்கின்ற மத்திய அரசு அமைய வேண்டும். தற்போதைய மத்திய அரசு, தமிழகத்திற்கு
மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பாரத தேசத்திற்கே கேடு விளைவிக்கிறது. இந்த
மக்கள் விரோத குறிப்பாக, ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் விரோத அரசு
தூக்கி எறியப்படவேண்டும். வரலாறு காணாத ஊழல், பணவீக்கம், ரூபாய் வீழ்ச்சி, குடும்ப அரசியல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கை, அண்டை நாடுகளில் மிரட்டல், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வு போன்ற அபாயங்களை எதிர்கொள்ள திறமையில்லாத திராணியற்ற அரசாக தற்போதைய மத்திய அரசு உள்ளது. சீனா போன்ற பெரிய நாடுகள் மட்டுமல்லாமல், மியான்மர் உள்ளிட்ட சிறிய நாடுகள் கூட இந்தியாவை மிரட்டி வருகின்றன. இவற்றை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. நாட்டிற்கு பெருமை சேர்க்க வலிமையான தலைமையைக் கொண்ட மத்திய அரசு தேவை. நாட்டை சீர்படுத்தி, இன்னல்களில் இருந்து மக்களை காக்க வலிமையான தலைமை தேவை.
முழுமையான வெற்றி பெறாமல்
வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியாது. எனவே தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெற
வேண்டும் என்பதே நமது இலக்கு. கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க அதிகாரம்
அளித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எந்த சூழலிலும் கழகத்திற்கு
நல்லதையே செய்வேன். முடிவுகளை எடுப்பேன். தொண்டர்களாகிய நீங்கள், முழு
அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வெளிப்படுத்தி 40 தொகுதிகளிலும் கட்சி
வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு செய்த சாதனைகள் ஏராளம். இவற்றை பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளில் பிரசாரங்களை தோற்கடிக்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். நம்பிக்கையே வெற்றிக்கு அடிப்படை. குறிக்கோளை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும். நாம் விரும்பும் அரசு அமையும். தமிழகத்தை முன்னணி மாநிலமாக ஆக்க முடியும். உங்களால் முடியும் என்று நான் நம்புகிறேன். உறுதி பூண்டுவிட்டால் எதையும் சாதிக்க முடியும். ஏற்காடு இடைதேர்தலில் வெற்றி பெறுவோம் என்பது தெரியும். முழு மூச்சுடன் பணியாற்றியதால் 78 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். கட்சியில் வேட்பாளராக ஆகும் தகுதியுள்ளவர்கள் ஏராளமானோர் இருந்தாலும், ஒரு தொகுதிக்கு ஒருவர் மட்டுமே வேட்பாளராக முடியும். எனவே ஆட்சிமன்றக்குழு யாரை தேர்ந்தெடுத்தாலும் அவர்களது வெற்றிக்காக பாடுபடவேண்டும். அடுத்தாண்டு கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடக்கும் போது, நாட்டை வழிநடத்தும் சக்தியாக அ.தி.மு.க., இருக்க வேண்டும். அ.தி.மு.க., செங்கோட்டையை அடைவதை யாராலும் தடுக்க முடியாது. அமைதி, வளம் மற்றும் வளர்ச்சியை இந்த நாட்டு மக்களுக்கு வாக்குறுதியாக அளித்து பார்லிமென்ட் தேர்தலை சந்திக்கப்போகிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
Comments