ஊழல் ' களை ' எடுக்கும் லோக்பால் ; நீண்ட கால கனவு இன்று நிறைவேறியது

புதுடில்லி: சி.பி.ஐ.,யை லோக்பால் கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமா, அல்லது அதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கலாமா? அனைத்து அரசு ஊழியர்கள் தொடர்பான ஊழல் விசாரணையும் இந்த லோக்பால் கட்டுக்குள் கொண்டு வரலாமா? பிரதமரை இதன் வரம்பிற்குள் கொண்டு வரலாமா, வேண்டாமா ? லோக்பால் ஆணைய உறுப்பினர்களாக யாரை நியமிப்பது? லோக்பால் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் எந்த முறையில் நடவடிக்கை எடுப்பது? உள்ளிட்ட பல பிரச்னைகள் எழும்பி,
நீண்டகாலமாக இழுபறியில் இருந்து வந்த லோக்பால் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது இதன் மூலம் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று விவாதம் நடந்த பின்னர் திருத்தங்களுக்கான ஒப்புதலுக்காக மீண்டும் லோக்சபாவுக்கு மசோதா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. நாளை ( புதன்கிழமை ) விவாதம் நடக்கிறது.

இன்றைய கூட்டத்தில் நிறைவேற்ற நேற்று ராஜ்யசபா தலைவர் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக கருத்தொற்றுமை ஏற்பட்டது.

லோக்பால் மசோதா கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர் நாராணயசாமி தாக்கல் செய்தார். இந்த மனு மீது விவாதம் நடத்தி சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் அன்னா ஹசாரே இந்த மசோதா நிறைவேறும் வரை தனது உண்ணாவிரதத்தை முடிக்க மாட்டேன் என இன்று 8 வது நாளை தொடர்கிறார்.

லோக்பால் மசோதாவை முலாயம்சிங்கின் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி சிறையில் இருந்து நேற்று விடுதலையான லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

ராகுலுக்கு ஹசாரே கடிதம்: கடந்த ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் பேசிய காங்., துணைத்தலைவர் ராகுல் இந்த மசோதா நிறைவேற அனைத்து கட்சியினரின் ஆதரவு தேவை என கோரியிருந்தார்.

தற்போது உள்ள லோக்பால் மசோதா திருப்தி அளிப்பதாகவும், இதனை தாக்கல் செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஹசாரே கூறியுள்ளார். இன்றும் ஹசாரே இந்த மசோதா கொண்டு வர முயற்சி எடுத்துள்ளமைக்கு ராகுலுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். மேலும் செலக்ட் கமிட்டி செய்த திருத்தங்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கெண்டிருக்கிறார். இந்த கடிதத்திற்கு பதில் அனுப்பிய ராகுல் பாராட்டுக்கு நன்றியும், கொண்டு வரும் லோக்பால் வலுவானதாக அமையும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இரு அவைகளும் ஒத்திவைப்பு : இன்று பார்லி., அவைகள் துவங்கியதும், லோக்பாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி எம்.பி.,க்கள் கோஷங்கள் எழுப்பினர். தெலுங்கானா விவகாரம் குறித்து ஆந்திர எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் லோக்பால் குறித்து விவாதம் துவங்கவில்லை. அமளி நீடித்ததால் இரு அவைகளும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது. மாலையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றபட்டது. இதனை சபை தலைவர் அமீது அன்சாரி அறிவித்தார். பின்னர் திருத்தப்பட்ட அம்சங்கள் தொடர்பாக ஒப்புதல் பெறுவதற்கு மீண்டும் லோக்சபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நாளை விவாதம் நடக்கும் என்றும் மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

Comments