கோவையில் பல்வேறு தொழில் அமைப்பின் நிர்வாகிகளை
சந்திப்பதற்காக, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ், நேற்று
வந்தார். அப்போது, கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
கூறியதாவது : ம.பி., ராஜஸ்தான், டில்லி, சத்தீஸ்கர், ஆகிய நான்கு
மாநிலங்களில், பா.ஜ., அதிக இடங்களைக் கைப்பற்றி, வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், அம்மாநில மக்கள் காங்., கட்சியை, ஒட்டுமொத்தமாக
நிராகரித்துள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, மோடி தலைமையிலான
நிரந்தர ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். நாட்டில் தற்போது ,35 வயதுக்கும்
கீழ் உள்ளவர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நிரந்தரமான,
குழப்பமற்ற ஆட்சியை விரும்புகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள,
பெரிய கட்சியான பா.ஜ., தனிப்பட்ட முறையில், 272 இடங்களை பிடிக்க, இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடக்கிறது. அதே நேரத்தில், மத்தியில் கூட்டணி
ஆட்சி தான் அமைப்போம். தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளிலும், பா.ஜ., தனி
கவனம் செலுத்தி வருகிறது. தொகுதி நிலவரம் பற்றி, கட்சி தொண்டர்கள்,
நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. வரும் லோக்சபா
தேர்தலில், தென் மாநிலங்களில், பா.ஜ., கூட்டணி, கூடுதல் பலம் பெறும்.
அதேபோல், பா.ஜ.,கூட்டணிக்கு விரைவில் புதிய கட்சிகள் வந்து சேரும். இலங்கை
தமிழர்கள் நலனில், பா.ஜ., எப்போதும் அக்கறை செலுத்தி வருகிறது.
அந்நாட்டில், தமிழர்களுக்கு சம உரிமை, என்பதே அதிகார பகிர்வாக இருக்க
வேண்டும். இவ்வாறு, முரளிதர் ராவ் கூறினார்.
Comments