லோக்சபா
தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, திருப்புமுனை திருச்சியில் வரும்,
பிப்ரவரி, 15, 16 ஆகிய தேதிகளில், தி.மு.க., மாநாடு நடக்கும் என, சில
நாட்களுக்கு முன், அக்கட்சி தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால், அதற்கு
முன்னரே கடந்த, 2ம் தேதி, நிறைந்த அமாவாசை நாளில், திருச்சி திண்டுக்கல்
ரோட்டில் உள்ள, ஆக்ஸ்போர்டு இன்ஜினியரிங் கல்லூரி பின்புறம் உள்ள இடத்தில்,
சுவாமி கும்பிட்டு, வாஸ்து பூஜை போடப்பட்டு, அங்கு இருந்த முட்புதர்களை
அகற்றும் பணி துவங்கியது. அந்த வாஸ்து பூஜையில், முன்னாள் அமைச்சர் நேரு
குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் வாரிசு ஒருவரும், கட்சியினரும் மட்டும்
பங்கேற்று உள்ளனர். அமாவாசை நாளன்று பூஜை செய்தால், எதிரிகள்
வீழ்த்தப்படுவர் என்பது ஐதீகம். அதன்படியே மாநாடு நடக்கும் இடத்தில்,
வாஸ்து பூஜை போடப்பட்டு உள்ளது. மாநாடு நடத்தப்படும் இடத்துக்கு, "அண்ணா
நகர்' என, பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அந்த இடத்தை கட்சிக்காரர்கள் சூழ,
முன்னாள் அமைச்சர் நேரு சுற்றிப் பார்த்தார். மாநாட்டு மேடையை டில்லியில்
உள்ள பார்லிமென்ட் கட்டடம் போல் வடிவமைக்கலாமா அல்லது டில்லி செங்கோட்டை
போல் வடிவமைக்கலாமா என, மாதிரி டிசைன்கள் தயார் செய்து, அதை தலைமைக்கு
அனுப்பி வைக்கும் பணியிலும், நேரு, தீவிரமாக இருப்பதாக, கட்சிக்காரர்கள்
தகவல் தெரிவிக்கின்றனர்.
Comments