'இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதிசயம் ஏற்படும்' : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

சென்னை:”இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அதிசயம் ஏற்படும். இறைவனிடம் அசைக்க முடியாத, நம்பிக்கை இருந்தால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

அ.தி.மு.க., சார்பில், சென்னை வர்த்தக மையத்தில், நேற்று, கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:ஒரு லட்சியத்தையோ, குறிக்கோளையோ அடைய வேண்டுமானால், உழைப்பு, எதையும் தாங்கும் இதயம், லட்சியக் கனவு ஆகியவை தேவை. எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கு தேவைப்படுவது, அசைக்க முடியாத நம்பிக்கை.இறை நம்பிக்கை என்பது மேலானது; நன்மைகள் அளிக்கக் கூடியது. துன்பங்களை தாங்கும் வலிமையை, கொடுக்கக் கூடியது. "தான்' என்ற அகந்தையை, அழிக்க வல்லது; தன்னலத்தை தகர்த்தெறிவது.

இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அதிசயம் ஏற்படும். இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை, உங்களிடம் இருந்தால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். இந்த நம்பிக்கையை தான், இயேசு வலியுறுத்துகிறார். இதை, நாம் கடைபிடித்தால், நாம் கேட்டதை இறைவினமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

விழாவில், கம்யூ., கட்சியினர், பேராயர் கிறிஸ்துதாஸ், மாநில சிறுபான்மையின நல ஆணையத் தலைவர் பிரகாஷ், பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி உட்பட, பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., அமைப்பு செயலர் பி.எச்.பாண்டியன் வரவேற்றார். எம்.பி., ரபிபெர்னார்டு நன்றி கூறினார்.

Comments