
மதுரை : மதுரையில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க, இன்று அஷ்டமி
சப்பரத்தில் சுவாமியும், அம்மனும் உலா வந்தனர். ஒரு சமயம் உலகத்தில்
அனைத்து உயிர்களுக்கும் படியளக்க சிவபெருமான் புறப்பட்டார். அவரை சோதிக்க
நினைத்த அம்மன், பாத்திரத்தில் எறும்பு ஒன்றை அடைத்து வைத்தார். எல்லா
உயிர்களுக்கும் படி அளந்த திருப்தியில் திரும்பிய சிவபெருமானிடம், ஒரு
உயிருக்கு மட்டும் நீங்கள் படியளக்கவில்லை, என்றார் அம்மன். பாத்திரத்தை
திறந்து பார்த்தபோது, அந்த எறும்புக்கு அருகிலும் அரிசி இருந்தது.
இதை
நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில்
சுவாமியும் பிரியாவிடை அம்மனும் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் தனி
சப்பரத்திலும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி
அளக்கும் வகையில் உலா வருவர். இந்நிகழ்ச்சி இன்று நடந்தது. அதிகாலை
கோயிலில் இருந்து இருவரும் புறப்பாடாகி, கீழமாசிவீதி வந்தனர். அங்கு இரு
சப்பரங்களில், சிவபெருமானும், அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி
கீழவெளிவீதி, தெற்கு வெளி வீதி, மேலவெளிவீதி, வடக்கு வெளிவீதி என நான்கு
வெளி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும்
வழியில், ஜீவராசிகளுக்கு படியளக்க, பக்தர்கள் ரோட்டின் இருபுறமும் அரிசியை
தூவியும், அதை எடுத்தும் வழிபட்டனர்.
Comments