ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிப்பு: ஏற்காட்டில் நிலம் வாங்க வி.ஐ.பி.,க்கள் ஆர்வம்

சேலம்:சேலம் மாவட்டம், ஏற்காட்டில், நிலம், காட்டேஜ் மற்றும் சொகுசு பங்களாக்களை வாங்குவதற்கு, வி.ஐ.பி.,க்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்து வருவதால், பசுமை காடுகள் அழிந்து, கான்கிரீட் காடுகள் மட்டுமே, மிஞ்சும் அபாயம் உருவாகியுள்ளது.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டின் தனிச்சிறப்பு அதன் குளுமை. செல்வந்தர்கள் முதல், ஏழைகள் வரை, அனைவரும், கோடைக்காலத்தில் மனதுக்கு ஆறுதல் வேண்டி, ஏற்காடுக்கு படையெடுப்பது வழக்கம். காபி தோட்டம், எஸ்டேட் என, இயற்கை சூழல் கொஞ்சிய ஏற்காடு மலைப்பகுதி, தற்போது, ரியல் எஸ்டேட் புரோக்கர்களின்
கையில் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி வருகிறது.பருவ நிலை மாறுதலால், ஏற்காட்டில் உள்ள, காபி தோட்ட தொழிலிலும், நிலையற்ற தன்மை காணப்படுகிறது. இதனால், பலரும், எஸ்டேட்களை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.இந்த சூழலில்,ஏற்காட்டில் ஒரு காட்டேஜ் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என, அரசியல்வாதிகள், செல்வந்தர்கள்,விரும்புகின்றனர். ஏற்காட்டில், ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. சேலம் மாநகர பகுதியில் விற்கப்படும் விலையை விட, ஏற்காட்டில் சில குறிப்பிட்ட இடங்களில், அதிக விலைக்கு நிலம் விற்கப்படுகிறது.மாநகர பகுதியில் இருந்து, 23 கி.மீ., தொலைவில் உள்ள ஏற்காட்டுக்கு, ரியல் எஸ்டேட் வியாபாரம் தொடர்பாக, தினமும் ஏராளமான, வி.ஐ.பி.,க்கள் குவிந்து வருவதால், எஸ்டேட்டை அழித்து, மனை நிலமாக்கும் பணிகளும் அதிகரித்து வருகிறது.ஏற்காடு ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில், ஒரு சதுர அடி நிலம், 3,000 ரூபாய் வரை, விலைபோகின்றன. தனியாக உள்ள பங்களாக்கள், 1கோடி ரூபாயில் இருந்து, 1.5 கோடி ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.அசம்பூர், நாகலூர் ரோடு, கிளியூர் அருவி செல்லும் வழி, பெட்போடு ரோடு உள்ளிட்ட பகுதிகளில், நிலம் மற்றும் காட்டேஜ் வாங்குவதற்கு, வி.ஐ.பி.,க்கள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்காட்டை சுற்றியுள்ள மலை கிராமப்பகுதிகளில் கூட, சதுர அடி, 1,000 ரூபாய் வரை விலை போகின்றன.

இதுகுறித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஒருவர் கூறியதாவது:சேலம் மட்டுமின்றி, சென்னை உள்ளிட்ட, வெளி மாவட்டங்களில் இருந்தும், பெங்களூரு, கேரளா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், ஏற்காட்டில் இடம் மற்றும் பங்களாக்கள் வாங்குவதற்கு, தினமும், பலர் வந்து செல்கின்றனர். ஆரம்பத்தில், ஏற்காடு அடிவாரத்தில் நிலம் வாங்குவதில் ஆர்வம் காட்டியவர்கள், தற்போது, ஏற்காட்டிலேயே நிலம் வாங்கி வருகின்றனர்.ஏற்காட்டில், பல இடங்கள், பிளாட் போட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டி கொடைக்கானல் உள்ளிட்ட, பிற மலைபகுதிகளை காட்டிலும், ஏற்காட்டில் நில மதிப்பு குறைவாக இருக்கிறது. கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் அதிக அளவில் இருப்பதில்லை. இதனால், வியாபார நிமித்தாக வந்து தங்கும் வெளிமாநில வியாபாரிகள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட, பல்வேறு தரப்பினர், இங்கு, நிலம் வாங்குவதற்கு படையெடுத்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்காட்டில், பசுமையை அழித்து, அனைத்தும் கான்கிரீட் கட்டடங்களாக மாறிவருவதால், ஏற்காட்டின் வெப்பநிலையும், ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில், ஏற்காட்டில் குளுமை காணாமல் போய், கான்கிரீட் காடுகள் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

Comments