"கிராமங்களிலும் மோடியின் தாக்கம்' : ஜெ., க்கு அ.தி.மு.க., தொண்டர் கடிதம்

சிவகங்கை: ""நரேந்திர மோடி, கிராமங்களிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதை அ.தி.மு.க., பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பா.ஜ., வுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது,'' என, முதல்வர் ஜெ., க்கு, அக்கட்சி தொண்டர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த, முதல்வரின் தனிப்பிரிவு மனுக்களுடன், இக்கடிதமும் இருந்தது.

சிவகங்கை, திருப்புத்தூர் ஒன்றியம், விராமதி ஊராட்சி அ.தி.மு.க., செயலாளர் ராஜூ, 51. இவர், 1972 ல் இருந்து, கட்சியின் விசுவாசி. செப்.,30 ல், முதல்வர் ஜெ., வின் இல்லத்திற்கு, மனு ஒன்று அனுப்பினார்.


அதில் எழுதப்பட்ட விபரம்:தற்போது, "சூப்பர் பவர்' கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக காங்., ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்பு, மக்கள் மனதில் வடுக்களாக பதிந்துவிட்டன. இதற்கு மாற்றாக, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி, தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், "பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்தால், சிறுபான்மையினர் ஓட்டு போய்விடும்' என, நாம் (அ.தி.மு.க.,) யோசிக்கிறோம். இதை பயன்படுத்தி, தி.மு.க.,- தே.மு.தி.க., போன்ற கட்சிகள் பா.ஜ., வுடன் சேர்ந்து விட்டால், இரு கட்சிகளும் மீண்டும் எழுச்சி கண்டு விடும்; அதற்கான வாய்ப்பை நாம் தரக்கூடாது.மீண்டும் மத்திய அரசில், தி.மு.க., வின் பங்களிப்பு என்பதே இருக்கக்கூடாது. நான், கிராமங்களில் அதிகம் சுற்றுபவன். மக்கள் மனதில், மோடி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த தாக்கம், எதிர் அணிகளுக்கு சாதகமாகி விடக்கூடாது. தமிழகத்தில், பா.ஜ., வுக்கு தளம் இல்லை; இருப்பினும், மோடியை, நடுநிலையாளர்கள் ஆதரிக்கின்றனர். லோக்சபா தேர்தலில், நம்கட்சி மேலோங்கி நிற்க, என்னுடைய தாழ்மையான கருத்தை தெரிவிக்கிறேன். இவ்வாறு எழுதியிருந்தார்.இக்கடிதம், நேற்று முன்தினம், முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து வந்தது.

கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,"முதல்வர் தனிப்பிரிவு மனுக்களுடன், இக்கடிதமும் இருந்தது. அதனுடன், வங்கி கடனுக்கான கோரிக்கை மனுவும் இருந்ததால், அந்த துறையினரிடம் ஒப்படைத்து விட்டோம்' என்றார்.

Comments