அப்போ விர்ர்... இப்போ சர்ர்... :மத்திய அரசை 'அழ' வைக்கும் வெங்காயம்

புதுடில்லி : வெங்காயத்தால் மத்திய அரசுக்கு தற்போது மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் வெங்காயத்தின் விலை கடுமையாக, கிலோ 100 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்ததால் வெங்காய ஏற்றுமதியை நிறுத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இதற்கு நேர் மாறாக, தற்போது வெங்காயத்தின் விலை கடுமையாக குறைந்துள்ளது. இதுவும் மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வெங்காய விலை குறைந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை எப்படி சமாளிப்பது என மத்திய அரசு குழம்பி உள்ளது.


கடந்த மாதம் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் தற்போது நாசிக்கில் விவசாயிகள் வெங்காய வியாபாரிகள் தங்களின் விற்பனையை நிறுத்தும் அளவிற்கு கடுமையாக சரிந்து கிலோ ரூ.9.50 என்ற அளவிற்கு உள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய வெங்காய மண்டியான லாசல்கானில் மொத்த விற்பனை சந்தையில் வெங்காயம் ரூ.9.50 க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை கடுமையாக ஏறியதை அடுத்து ஏற்றுமதி கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வெங்காய விலை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை கணிசமாக குறைக்க வேண்டும் என தலைவர்கள், விவசாயிகள் என பலரும் அரசை அறிவுறுத்தின. இதனை ஏற்று அரசும் வெங்காயத்திற்கான ஏற்றுமதி விலையை 30 சதவீதம் குறைத்துள்ளது.

நவம்பர் மாதத்தில் வெங்காய விலை ஏற்படுத்திய நெருக்கடியால், தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலையும் கிலோ ரூ.80க்கு விற்பனையானது. ஆனால் தற்போது மொத்த விற்பனை சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.9 முதல் 10 ரூபாய் என்ற அளவிற்கு வந்துள்ளது. அடுத்த மாதம் இது, ரூ.5 வரை குறையலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில தினங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட வெங்காய ஏற்றுமதியை, இப்போது ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசு ஏற்பட்டுள்ளது. வெங்காயத்திற்கான குறைந்த பட்ச விலையையும் டன் ஒன்றிற்கு 1150 டாலரில் இருந்து 800 டாலராக குறைக்க வேண்டி உள்ளது. வெங்காயத்தின் விலை மேலும் குறையும் பட்சத்தில் குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை 300 டாலர் வரை குறைந்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்படும். மத்திய அரசும், மாநில ஏஜெண்டுகளும் நெருக்கடியை கட்டுப்படுத்த தவறியதாலேயே இந்த அதிரடி விலை ஏற்றமும், அதிரடி சரிவும் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் ஏற்பட்ட விலை ஏற்றம் புதியதல்ல; இந்த தட்டுப்பாடு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றம் நவம்பர் மாத்தில் ஏற்படக் கூடியது தான்; இதற்கு முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் அக்டோபர் மாதத்திலேயே நிலைமை சீராக துவங்கி இருக்கும்; கோடை காலத்தில் பயிடுவதற்காக வெங்காயம் சேமித்து வைக்கப்படுவதால் கடந்த மாதம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; வெங்காயம் சேமித்து வைப்பதற்கான கிடங்குகளை அரசு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி கழக துணை இயக்குனர் ஹரி பிரகாஜ் சர்மா தெரிவித்துள்ளார்.

வெங்காய விலை ஏறிய போது மக்களும், தற்போது குறைந்த போது விவசாயிகளும் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் மத்திய அரசு செய்வதறியாது தவித்து வருகின்றது. மொத்ததில், வெங்காயம் மத்திய அரசை ரொம்பவே அழ வைத்துள்ளது.

Comments