காட்டு யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் அவசியமா?

சென்னை: மேட்டுப்பாளையத்தில் நடக்கும் யானைகள் புத்துணர்ச்சி முகாமுக்கு, முதுமலை மற்றும் ஆனைமலை காப்பகத்தில் உள்ள, 55 யானைகளை கொண்டு செல்ல, தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பசுமை இயக்கத்தின், இணைச் செயலரான, ஊட்டியைச் சேர்ந்த, ஜெயச்சந்திரன் என்பவர், தாக்கல் செய்த மனு: இம்மாதம், 19ம் தேதி முதல், பிப்., 4ம் தேதி வரை, 48 நாட்கள், மேட்டுப்பாளையத்தில், யானைகள் புத்துணர்ச்சி முகாம் நடக்கிறது. கோவில்கள், மடங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு, ஓய்வு, சத்துணவு, மருத்துவ வசதிகள் அளிக்கும் விதத்தில், இந்த முகாம் நடக்கிறது.


கடந்த காலங்களில் நடந்த முகாம்களில், கோவில் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகள் தான் அனுப்பப்பட்டன. இப்போது தான், முதன்முறையாக, முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் சரணாலயம், வண்டலூர் உயிரியல் பூங்காவில், வனத்துறையினரால் பராமரிக்கப்படும், 55 யானைகளையும், மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பும் திட்டம் உள்ளது. கோவில் யானைகளுக்கும், சரணாலயங்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கும், வேறுபாடு உள்ளது. கோவில் யானைகள், பழக்கப்பட்டவை; காடுகளில் பிடிபட்டு, சரணாலயங்களில் பராமரிக்கப்படும் யானைகள், அப்படிப்பட்டதல்ல; காடுகளில் சுதந்திரமாக திரியும்.

அந்த யானைகளுக்கு, முகாமில் உகந்த சூழ்நிலை இருக்காது. காட்டு யானைகளை, புத்துணர்ச்சி முகாமுக்கு அனுப்பினால், அவற்றுக்கு நோய்கள் வரலாம். எனவே, முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள, காட்டு யானைகளை, மேட்டுப்பாளையத்தில் நடக்கும், புத்துணர்ச்சி முகாமுக்கு அனுப்ப, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை, இன்று நடக்கிறது.

Comments