ஜாமினில் லாலு: முதலில் கோவில்;பின்னர் வீடு

ராஞ்சி: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீ்கார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்யாதவிற்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. இதனையடுத்து அவர் நாளை (திங்கட்கிழமை) விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படு்கிறது.

ஜாமினில் விடுதலை:

வெள்ளிக்கிழையன்று லாலுவின் ஜாமின் மனு குறித்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த போதிலும் அதற்கான உத்தரவு கீழ் நீதிமன்றத்திற்கு வர தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து திங்கட்கிழமை நீதிமன்ற
பணி நேரத்தில் அரை மணி நேரத்திற்குள்ளாக ஜாமின் நடவடிக்கை குறித்த பணிகள் முடிந்த உடன் அவர் விடுவிக்கப்படுவார் என லாலுவின் வக்கீல் பிரபாத்குமார் தெரிவித்தார்.

வீடியோ கான்பிரசிங்கில் விசாரணை :

கடந்த செப்டம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்ட லாலு மீது ஏற்கனவே பல்வேறு கருவூலங்களில் ஊழல் புரிந்ததாக நான்கு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தும் வீடியோ கான்பிரசிங் மூலம் விசாரிக்கப்பட்டு லாலுவுக்கு ஜாமின் வழங்கியது. இருப்பினும் சாய்பாஷா கருவூலத்தில் நடத்திய 37.7 கோடி ரூபாய் மோசடி குறித்த வழக்கில் மட்டும் ஜாமின் கிடைக்காமல் இருந்தது.

இந்த வழக்கில் லாலுவுடன் மேலும் 44 பேர் குற்றவாளிகள்என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் தண்டனையை எதிர்த்து ஜார்கண்ட் மாநில ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் 37 பேர் முன்னதாகவே ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். லாலுவிற்கு ஜாமின் வழங்கப்படாத நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையின் முடிவில் நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகோய் ஜாமின் உத்தரவை வழங்கினர்.

கோவிலுக்கு செல்ல முடிவு:


அனைத்து வழக்குளிலும் ஜாமின் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியினர். இது குறித்து கட்சியி்ன் செய்திதொடர்பாளர் மனோஜ் குமார் கூறுகையில் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் ஜாமினில்இருந்துவெளியே லாலு வந்தவுடன் முதல்காரியமாக கோவிலுக்கு சென்று வழிபட்ட பின்னர் வீட்டிற்கு திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

லாலுவிற்கு ஜாமின் கிடைத்த போதிலும் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் அவர் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments