புத்துணர்வு முகாம்களுக்கு வராத கோவில் யானைகளுக்கு புது ஏற்பாடு

மேட்டுப்பாளையம், புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ள முடியாத யானைகளுக்கு, முகாமில் கொடுக்கப்படுவது போலவே, உணவு, மருந்துகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில், கோவில் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம், அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படுகிறது.


நாளை துவக்கம்:

இந்த முகாம், நாளை, 19ம் தேதி துவங்கி, பிப்., 4ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள, தமிழக கோவில்கள், மடங்களில் வளர்க்கப்படும் யானைகளை கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. கடந்த முறை நடத்தப்பட்ட முகாமுக்கு, அனைத்து கோவில், மடங்களில் வளர்க்கப்படும் யானைகளும் கொண்டு வரப்பட்டன.

இந்த ஆண்டில், 'லாரியில் ஏற தயங்கும், ஏற முடியாத யானைகளை அழைத்து வர வேண்டாம்' என, அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இதில், சேலம் சுகவ னேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி காலில் ஏற்பட்ட புண்ணால், கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக உடல் நலம் குன்றி விட்டது. இதனால், புத்துணர்வு முகாம்களில் ராஜேஸ்வரி கலந்து கொள்ளவில்லை. இதே நிலை தான், இப்போதும் தொடர்கிறது. இதேபோல், மேலும், மூன்று யானைகள் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளாது எனத் தெரிகிறது.

புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளாத யானைகளுக்கு, முகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு வழங்கப்படுவது போல், சத்தான உணவு, மருந்து பொருட்களை, அவற்றின் வசிப்பிடங்களிலே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: புத்துணர்வு முகாமில், கலந்து கொள்ள முடியாத யானைகளுக்கு, முகாமில் பிற யானைகளுக்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் இங்கு வழங்க உள்ளோம். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் இருந்து வருவதால், யானைகளுக்கு, அந்த நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது, இவ்வாறு, அவர் கூறினார்.

Comments