"காஸ்' பயன்படுத்தி காட்டுக்குள் "கமகம' சமையல்: விலங்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

வால்பாறை: வால்பாறை காட்டுக்குள் சமைத்து சாப்பிடும் சுற்றுலாப்பயணிகளால், வனவளம் பாதிக்கப்படுவதோடு, விலங்குகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், அணைகள், நீர்வீழ்ச்சிகள், நல்லமுடி காட்சிமுனை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, பசுமையான தேயிலைத்தோட்டங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்வதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்க்க, இவர்களில் சிலர் அடுப்பு, பாத்திரங்கள், காஸ் சிலிண்டர் சகிதமாக வருகின்றனர். நடுக்காட்டில் சமைத்து சாப்பிட்டு விட்டு கழிவுகளை அப்படியே விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சிலர், வால்பாறை அடுத்துள்ள புதுத்தோட்டம் செல்லும் சாலையோரத்தை, சமையல் கூடமாக மாற்றி, காஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்தனர். உலகின் அரிய வகை வனவிலங்கான, சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் நடமாடும் இந்தப்பகுதியில், திறந்தவெளியில் சமையல் செய்வது வனவிலங்குகளின் பாதுகாப்பை கேள்விக்குரியதாக்கும். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் சமையல் செய்யும் போது, வனத்தில் எளிதில் தீப்பற்றி எரிய வாய்ப்பு உள்ளது. சிலர் சமையல் முடிந்தவுடன் தீயை சரியாக அணைக்காமல் சென்று விடுவதாலும் தீ பரவும் அபாயம் உள்ளது. சுற்றுலா பயணிகளின் இந்த செயல், இயற்கை ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட வன அலுவலர் வேலுச்சாமியிடம் கேட்ட போது, ""ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட எந்த ஒரு பகுதியிலும், சுற்றுலாப்பயணிகள் சமையல் செய்யக்கூடாது. சாப்பிட்ட உணவு மற்றும் மாமிசக்கழிவுகளை திறந்தவெளியில் வீசுவதால், சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படும். வனவிலங்குகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். இக்காப்பகத்தில் விதிமுறையை மீறி இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

Comments