மொபைல் போன் டவர்களால் கதிர்வீச்சு அபாயம் இல்லை: இந்திய மருத்துவ கழக டாக்டர்கள் அறிவிப்பு

மும்பை: 'தொலைத் தொடர்பு சேவைக்காக நிறுவப்பட்டுள்ள, மொபைல் போன் கோபுரங்களால், கதிர்வீச்சு அபாயம் இல்லை' என, இந்திய மருத்துவ கழகத்தை சேர்ந்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல லட்சம், மொபைல் போன் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. தகவல் தொடர்புக்காக அமைக்கப்படும் இந்த டவர்களால், கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் என்றும், அதனால், புற்றுநோய், தோல் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்
என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த கருத்துகளை, இந்திய மருத்துவக் கழக டாக்டர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து, இந்திய மருத்துவக் கழகத்தின் மும்பை பிரிவு தலைவர், டாக்டர், எஸ்.கே., ஜோஷி மற்றும் டாக்டர், பார்திவ் சங்வி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மொபைல் போன் டவர்கள் பற்றிய வதந்திகளுக்கு தகுந்த ஆதாரம் இல்லை. நாட்டில் ஏராளமான மொபைல் போன் டவர்கள் உள்ளன. இவற்றிலிருந்து உமிழப்படும் கதிர்வீச்சுகள், வீட்டில் தினமும் பயன்படுத்தும், தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்கள் ?வளியிடும் கதிர்வீச்சுகளை விட மிகக் குறைவு. மொபைல் போன் டவர்களை விட, 'டிவி' மற்றும் ரேடியோக்கள், 10 மடங்கு அதிக கதிர்வீச்சுகளை உமிழ்கின்றன. அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளை விட, இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலேயே கதிர்வீச்சு உமிழப்படுகிறது. இந்த கதிர்வீச்சுகளால், புற்று நோய், தோல் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதுகுறித்து, பொதுமக்களிடையே தவறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. நடுத்தரக் குடும்பங்களில் கூட பயன்படுத்தப்படும், மைக்ரோ வேவ் ஓவன்கள், மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும், எக்ஸ் - ரே கருவிகள், எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன் கருவிகள் போன்றவையும் கதிர்வீச்சுகளை உமிழ்கின்றன. அவற்றை ஒப்பிடும் போது, மொபைல் போன் டவர்களிலிருந்து உமிழப்படும் கதிர்வீச்சின் அளவு, மிகக் குறைவே. எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டி அவசியமில்லை. இவ்வாறு, டாக்டர்கள் கூறி உள்ளனர்.

Comments