சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும்
சிறந்த வீரர்கள் அடங்கிய டெஸ்ட், ஒருநாள் கனவு அணி தேர்வு செய்யப்படும்.
இம்முறை 2012, ஆக., 7 முதல் 2013, ஆக., 25 ம் தேதி வரையிலான காலம் கணக்கில்
எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட
வீரர்களை, கும்ளே தலைமையிலான குழு தேர்வு செய்தது.
எதிர்பார்த்தது போலவே தொடர்ந்து ஆறாவது முறையாக ஒருநாள் போட்டிக்கான
அணியில் தோனி இடம் பெற்றார். மீண்டும் கேப்டனாக இவரே தேர்வு
செய்யப்பட்டார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி., சாம்பியன்ஸ்
டிராபி தொடரில் அசத்திய ஷிகர் தவான், "ஆல் ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜாவும்
ஒருநாள் அணியில் இடம் பிடித்தனர்.
குக் கேப்டன்:
டெஸ்ட் அணியில் தோனி இடம் பெற்றாலும், கேப்டனாக இங்கிலாந்தின் அலெஸ்டர்
குக் தேர்வு செய்யப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்
"ஆல் ரவுண்டராக' மிரட்டிய அஷ்வின் 12வது வீரராக இடம் பிடித்தார். இவருடன்
புஜாராவும் வாய்ப்பு பெற்றார்.
தோனி "டாப்':
சர்வதேச போட்டிகளில் முடிவு எடுக்கும் திறமை, நெருக்கடியான நேரங்களில்
செயல்படும் விதம், சிறப்பான திட்டம் வகுத்தல் போன்ற திறமைகளின்
அடிப்படையில் கடந்த 2010 முதல் "மக்களின் மனம் கவர்ந்த வீரர்' விருதை
ஐ.சி.சி., வழங்குகிறது.
இந்த ஆண்டு இவ்விருதுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் தோனி, விராத்
கோஹ்லி, ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், இங்கிலாந்தின் அலெஸ்டர் குக்,
தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் இடம் பெற்றிருந்தனர்.
இதற்கான ஓட்டெடுப்பு "ஆன் லைன்' மூலம் கடந்த நவ., 2 முதல் 23ம் தேதி வரை
நடந்தது. மொத்தம் 1,88,000 ரசிகர்கள் ஓட்டளித்தனர். இதில், இந்திய கேப்டன்
தோனி முதலிடம் பிடித்தார். தற்போது இவர், தென் ஆப்ரிக்கா சென்றுள்ளதால்,
இவ்விருதை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் படேல்
பெற்றுக் கொண்டார்.
மூன்றாவது வீரர்:
இதன் மூலம் இவ்விருதை வெல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார்
தோனி. சர்வதேச அரங்கில் மூன்றாவது வீரரானார். இதற்கு முன் கடந்த 2010ல்
இந்திய வீரர் சச்சின், இவ்விருதை வென்றார். பின் 2011, 12ல் இலங்கையின்
சங்ககரா இவ்விருதை தட்டிச்சென்றார்.
இவை தவிர, இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர்
ஆகிய இரண்டு தனிநபர் விருதுக்கும் தோனியின் பெயர் பரிந்துரைக்கப்
பட்டுள்ளது.
கனவு டெஸ்ட் அணி: அலெஸ்டர் குக் (இங்கிலாந்து,
கேப்டன்), புஜாரா (இந்தியா), ஆம்லா (தென் ஆப்ரிக்கா), மைக்கேல் கிளார்க்
(ஆஸ்திரேலியா), மைக்கேல் ஹசி(ஆஸ்திரேலியா), டிவிலியர்ஸ் (தென் ஆப்ரிக்கா),
தோனி (இந்தியா), சுவான் (இங்கிலாந்து), ஸ்டைன் (தென் ஆப்ரிக்கா), ஆண்டர்சன்
(இங்கிலாந்து), பிலான்டர் (தென் ஆப்ரிக்கா). 12வது வீரர்: அஷ்வின்
(இந்தியா).
கனவு ஒருநாள் அணி: தில்ஷன் (இலங்கை), ஷிகர் தவான் (இந்தியா), ஆம்லா
(தென் ஆப்ரிக்கா), சங்ககரா (இலங்கை), டிவிலியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), தோனி
(இந்தியா, கேப்டன்), ரவிந்திர ஜடேஜா (இந்தியா), அஜ்மல் (பாகிஸ்தான்),
மிட்சல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஆண்டர்சன் (இங்கிலாந்து), மலிங்கா
(இலங்கை). 12வது வீரர்: மிட்சல் மெக்கிலகன் (நியூசிலாந்து).
ரசிகர்களுக்கு நன்றி
தோனி கூறுகையில்,""ரசிகர்களின் ஓட்டு மூலம் இவ்விருதை வென்றது அளவில்லாத
திருப்தி தருகிறது. ஒவ்வொரு முறை போட்டியில் களமிறங்கும் போதும் இரவு,
பகல் பார்க்காமல் ரசிகர்கள் அளிக்கும் உற்சாகம் தான் ஒருவரை முன்னோக்கி
செல்ல ஊக்கம் அளிக்கிறது. எனக்கு ஆதரவு அளித்த எல்லா ரசிகர்களுக்கு என்
நன்றி,'' என்றார்.
10வது ஆண்டு
ஐ.சி.சி., சார்பில் விருதுகள் வழங்கும் விழா 10வது ஆண்டாக நடக்கவுள்ளது.
இந்த ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி "டிவி' ஒளிபரப்ப
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன் இவ்விழா லண்டன் (2004, 2011), சிட்னி
(2005), மும்பை (2006), ஜோகனஸ்பர்க் (2007, 09), துபாய் (2008), பெங்களூரு
(2010), கொழும்பு (2012) ஆகிய இடங்களில் நடந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான தனிநபர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின்
பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் சிறந்தவர்களுக்கான விருது வரும் 14ல்
அறிவிக்கப்படும்.
சிறந்த கிரிக்கெட் வீரர்:
ஆம்லா (தென் ஆப்ரிக்கா), ஆண்டர்சன் (இங்கிலாந்து), மைக்கேல் கிளார்க்
(ஆஸ்திரேலியா), அலெஸ்டர் குக் (இங்கிலாந்து), தோனி (இந்தியா), சங்ககரா
(இலங்கை).
சிறந்த டெஸ்ட் வீரர்:
ஆம்லா (தென் ஆப்ரிக்கா), ஆண்டர்சன் (இங்கிலாந்து), அஷ்வின் (இந்தியா), மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா), புஜாரா (இந்தியா).
சிறந்த ஒருநாள் வீரர்:
அஜ்மல் (பாகிஸ்தான்), ஷிகர் தவான் (இந்தியா), தோனி (இந்தியா), மிஸ்பா (பாகிஸ்தான்), ரவிந்திர ஜடேஜா (இந்தியா), சங்ககரா (இலங்கை).
வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்:
பவுல்ட் (நியூசிலாந்து), புஜாரா (இந்தியா), ஜோ ரூட்(இங்கிலாந்து), மிட்சல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா).
* இவை தவிர, சிறந்த அம்பயர்களுக்கான விருதுக்கு தர்மசேனா, ஸ்டீவ்
டேவிஸ், அலீம் தர், எராஸ்மஸ், ராட்னி டக்கர் மற்றும் "டுவென்டி-20'
போட்டியின் சிறந்த தருணத்திற்கான விருது, சிறந்த விளையாட்டு உணர்வுக்கான
விருது, சிறந்த வீராங்கனை(ஒருநாள், "டுவென்டி-20') விருதுக்கு
பேட்ஸ்(நியூசி.,), சாரா டெய்லர்(இங்கிலாந்து) உள்ளிட்டோரின் பெயர்கள்
பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
கோஹ்லி புறக்கணிப்பு
சிறந்த ஒருநாள் போட்டி வீரர்கள் தரவரிசையில், கோஹ்லி (857 புள்ளி),
"நம்பர்-1' இடத்தில் <உள்ளார். இந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீரர்கள்
வரிசையிலும், முதலிடம் (31 போட்டி, 1237 ரன்கள்) இவருக்குத் தான்.
விருதுக்கு ஐ.சி.சி., கணக்கெடுத்த காலத்தில் 2 சதம் உட்பட 689 ரன்கள்
எடுத்தார் கோஹ்லி (சராசரி 40.52). இருந்தும் இந்த ஆண்டுக்காக கனவு ஒருநாள்
அணியில் தேர்வாகவில்லை.
இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறுகையில்,""
கோஹ்லியின் பெயர் எங்களது பரிசீலனையில் இருந்தது. யாரை தேர்வு செய்வது,
வெளியேற்றுவது என, போட்டி கடுமையாக இருந்தது. கடைசியில் கோஹ்லிக்கு
அதிர்ஷ்டம் இல்லாமல் போனது. அடுத்த ஆண்டு இவர் இடம் பெறவில்லை என்றால் தான்
ஆச்சரியம்,'' என்றார்.
Comments