டில்லி முதல்வராக, 'ஆம் ஆத்மி' கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று முன்தினம் பதவியேற்றார். பதவியேற்பதற்கு முன், 'குடிநீர் பிரச்னை, மின்சார பிரச்னை ஆகியவற்றை, பதவியேற்ற, 24 மணி நேரத்தில் தீர்ப்பேன்; ஊழலை ஒழிப்பேன்' என, முழங்கி வந்தார்.
மக்கள் அதிக எதிர்பார்ப்பு:
இதனால்,
அவரிடம், டில்லி மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு, ஓட்டுகளை
பெருவாரியாக அளித்து, வெற்றி பெறச் செய்தனர்.நேற்று முன்தினம், முதல்வராக
பொறுப்பேற்ற, கெஜ்ரிவாலுக்கு, பதவியில் அமர்ந்த பிறகு தான், நிர்வாகச்
சிக்கல் தெரிய வந்தது. 'தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, சில
நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை; அவற்றை நிறைவேற்ற, சற்று
காலம் பிடிக்கும்' என, கூறினார்.நேற்று காலை, காஜியாபாத்தில் உள்ள,
கெஜ்ரிவால் வீடு முன், ஏராளமான மக்கள், கோரிக்கை மனுக்களுடன்
குவிந்தனர்.டில்லி போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும், 1,000க்கும்
மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் குவிந்தனர். 'நாங்கள், பல
ஆண்டுகளாக பணியாற்றுகிறோம்; இன்னும், எங்களை நிரந்தரமாக்கவில்லை' என,
அவர்கள் கோஷமிட்டனர். கெஜ்ரிவால் வீட்டுக்கு வந்திருந்த பலர், தண்ணீர்,
மின்சாரம், கழிவு நீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும்படி,
வலியுறுத்தினர்.
படிப்படியாகத்தான் முடியும்:
அப்போது, அவர்களிடையே, கெஜ்ரிவால் பேசியதாவது: உங்களின்
பிரச்னைகளை, ஒரே நாளில் தீர்த்து விட முடியாது. இப்போது தான், முதல்வராக
பதவியேற்றுள்ளேன். படிப்படியாகத் தான், தீர்க்க முடியும். டில்லி
மாநிலத்தில், அரசுத் துறைகளில் உள்ள நடைமுறைகளை மாற்ற, 10 நாட்களாவது,
அவகாசம் தேவை.அதற்கு, உங்களின் ஒத்துழைப்பு தேவை. அதுவரை, பொறுமையாக இருக்க
வேண்டும்.அனைத்து பிரச்னைகளையும் உடனடியாக தீர்த்து விடுவதாக, போலியான
வாக்குறுதியை நான் கொடுக்கவில்லை.இவ்வாறு, அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
காங்கிரஸ் கட்சியை, ஊழல் கட்சி என, அடிக்கடி விமர்சித்து வந்த கெஜ்ரிவால், அந்த கட்சி ஆதரவுடன், இப்போது ஆட்சி அமைத்துள்ளார். இது, வேடிக்கையாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. காங்கிரஸ் கட்சி, விரைவிலேயே, கெஜ்ரிவால் அரசை கவிழ்த்து விடும்.
காங்கிரஸ் கட்சியை, ஊழல் கட்சி என, அடிக்கடி விமர்சித்து வந்த கெஜ்ரிவால், அந்த கட்சி ஆதரவுடன், இப்போது ஆட்சி அமைத்துள்ளார். இது, வேடிக்கையாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. காங்கிரஸ் கட்சி, விரைவிலேயே, கெஜ்ரிவால் அரசை கவிழ்த்து விடும்.
பிரபாத் ஷா,பா.ஜ., துணைத் தலைவர்
ம.பி., தலைவர் விலகல்:
மத்திய
பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 'ஆம் ஆத்மி' கட்சியின் முக்கிய தலைவர்களில்
ஒருவரான, கமல் ஸ்ரீவத்சவா, அந்த கட்சியிலிருந்து, நேற்று விலகியுள்ளார்.
அவர் கூறியதாவது:டில்லியில் ஆட்சி அமைத்ததன் மூலம், ஆம் ஆத்மி கட்சி, தன்
கொள்கையிலிருந்து விலகிச் சென்று விட்டது. காங்கிரசுடன் ஆட்சி அமைத்ததற்கு
பதிலாக, மீண்டும், சட்டசபை தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். பதவி
ஆசைக்காக, கெஜ்ரிவால், ஊழல் கட்சியான காங்கிரசுடன் இணைந்துள்ளார்.இவ்வாறு,
அவர் கூறினார்.
ஏராளமானோர் திரண்டதால் போலீசார் திணறல்:
கெஜ்ரிவால்
வீட்டு முன், ஏராளமானோர் கூடியதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல்,
போலீசார் திணறினர். அந்த பகுதியில், கடுமையான போக்குவரத்து நெருக்கடியும்
ஏற்பட்டது. இதையடுத்து, கூடுதல் போலீசார், அங்கு குவிக்கப்பட்டு,
பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
யாகம் நடத்திய முதல்வர் தந்தை :
அரவிந்த்
கெஜ்ரிவாலின் தந்தை, கோவிந்த் ராம் கெஜ்ரிவால், காஜியாபாத்தில் உள்ள ஒரு
கோவிலில், நேற்று, சிறப்பு யாகம் நடத்தினார். 'தேர்தல் பிரசாரத்தின்போது,
அளித்த வாக்குறுதிகளை எல்லாம், தன் மகன் நிறைவேற்ற வேண்டும்' என, வேண்டி,
இந்த யாகத்தை, அவர் நடத்தினார். இந்த யாகத்தில், காஜியாபாத்தைச் சேர்ந்த,
ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.
'கிங்பிஷர்' ஊழியர்களும் சம்பளம் கேட்டு மனு :
டில்லியை தலைமையகமாகச் செயல்படும், 'கிங்பிஷர்' விமான நிறுவனத்தின்
ஊழியர்கள் கூறியதாவது:எங்களுக்கு, 17 மாதங்களாக, சம்பளம் கொடுக்கவில்லை.
இந்த பிரச்னையில் தலையிட்டு, எங்களுக்கு சம்பளம் வழங்க உதவும்படி, காங்., -
பா.ஜ., கட்சிகளிடம் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால், அவர்கள்,
அலட்சியப்படுத்தி விட்டனர். இதனால், புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள,
அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியை நாட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள்
கூறினர்.
மின் கட்டணம் குறைப்பா?
'டிலாய்ட்'
நிறுவனத்தின் இயக்குனர், தேபஷிஸ் மிஸ்ரா கூறுகையில், ''டில்லியின் புதிய
முதல்வராக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், மின் கட்டணத்தை, 50 சதவீதம்
குறைக்கப் போவதாகக் கூறியுள்ளார். மின்சாரம் சப்ளை செய்யும்
நிறுவனங்களுக்கு மானியம் அளித்தால் தான், இந்த கட்டணக் குறைப்பு
சாத்தியமாகும்,'' என்றார்.
Comments