மின் வினியோகத்தில் திடீர் திருப்பம் : தடையில்லா மின் வினியோகம்

சென்னை:தமிழகத்தில் நேற்று, மின் நுகர்வு குறைந்து இருந்தது. இதனால், தடையில்லாமல், மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது; பெரும்பாலான இடங்களில், மின்தடை ஏற்படவில்லை.

காற்றாலை, அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி குறைந்ததால், தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், சென்னையில், 2 மணி நேரமும், மற்ற பகுதிகளில், 8 மணி நேரம் வரையும் மின் தடை செய்யப்படுகிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு, போர்க்கால நடவடிக்கை எடுத்தது. அதை தொடர்ந்து அனல் மற்றும் நீர் மின் நிலையங்களில், மின் உற்பத்தி அதிகரித்தாலும்,
பருவ மழையால் மின்தேவை குறைந்ததாலும், நேற்று, பகல் நேர மின் நுகர்வுக்கு, தேவையான மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

நேற்று காலை, 7:50 மணிக்கு, நீர் மின் நிலையங்கள், 1,060; அனல் மின் நிலையங்கள், 3,000; காற்றாலைகள், 510; எரிவாயு நிலையங்களில், 310 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. மத்திய தொகுப்பு, 2,260; வெளி மாநில மின் நிலையங்களிடம் இருந்து, 3,260 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இதனால், மொத்த மின்சாரம், 10,400 மெகாவாட்டாக அதிகரித்து. மேலும், மாநிலம் முழுவதும், நேற்று, பரவலாக மழை பெய்ததால், "பம்ப்செட் மோட்டார்' உபயோகம் குறைந்தது. இதனால், நேற்று, மின்தேவை குறைந்திருந்தது. தேவைக்கு ஏற்ப மின்சாரம் வினியோகம் செய்ததால், மாநிலம் முழுவதும் வழக்கமாக, காலை முதல், மதியம் வரை, மின்தடை செய்யப்படும் இடங்களில், நேற்று மின்தடை செய்யப்படவில்லை.சில தினங்களுக்கு முன், 2,000 மெகாவாட் ஆக இருந்த மின் பற்றாக்குறை, நேற்று முன்தினம், 950 மெகாவாட் ஆக குறைந்தது.

Comments