புதுடில்லி: லோக்சபா தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் யாருக்கு
செல்வாக்கு என கணிக்கும் விதமாக, ஒரு ஒத்திகையாக சமீபத்திய 5 மாநில தேர்தல்
முடிந்திருக்கிறது. குறிப்பாக டில்லியில் நிலைமை என்னவாக இருக்கும்?
தலைநகரில் ஆட்சி பீடம் யாருக்கு கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு,
அரசியல் கட்சியினர் இடையே மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள
மக்களிடையேயும் நிலவுகிறது.
நேற்று ( புதன்கிழமை ) டில்லியில்
ஓட்டுப்பதிவு முழு அமைதியாக நடந்து முடிந்தது. இங்குள்ள மொத்தம் 70
தொகுதிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 68 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. தேர்தல்
முடிந்ததும் டில்லி தேர்தல் குறித்த முடிவுகள் எந்த மாதிரியாக இருக்கும்
என பிரபல முன்னணி நிறுவனங்கள் தங்களின் கருத்துக்கணிப்புகளை
வெளியிட்டுள்ளன.
இதில் சி- வோட்டர் என்ற நிறுவனம் தங்களின் முடிவுகளில் , பா.ஜ., கட்சியே
அதிக தொகுதிகளை பெற்று மிகப்பெரிய கட்சியாக திகழும் என்றும், இந்த
கட்சிக்கு 31 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ்- 20. ஆம்ஆத்மி- 15
இடங்களை பிடிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதாவது எந்த கட்சிக்கும்
பெரும்பான்மை கிடைக்காது; தொங்கு சட்டசபை ஏற்படலாம்.
ஏ.சி, நெல்சன் என்ற நிறுவனம்; டில்லியில் பா.ஜ., 37 தொகுதிகளை பிடித்து
இங்கு ஆட்சியில் அமரும் என்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ்- 16 , ஆம்ஆத்மி -
15 தொகுதிகளை பிடிக்க கூடும் என்று தெரிவித்துள்ளது.
இது போல் இந்தியா டுடே மற்றும் ஓ.ஆர்.ஜி., இணைந்து நடத்திய
கருத்துக்கணிப்பில் ; பா. ஜ., இதுவரை இல்லாத அளவில் 41 தொகுதிகளை கைப்பற்றி
தனி மெஜாரிட்டியுடன் டில்லியில் ஆட்சியில் அமரும். காங்கிரஸ் -20,
ஆம்ஆத்மி கட்சி மிக சொற்ப அளவில் 6 தொகுதிகளையே பிடிக்கும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 3 கருத்துக் கணிப்புகள்
பா.ஜ.,வுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டிருக்கும் நேரத்தில், சாணக்யா
வெளியிட்ட கருத்துக் கணிப்பில், ஆம் ஆத்மி கட்சி 31 இடங்களில் வெற்றி
பெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்றும், பா.ஜ.,வுக்கு 29
இடங்களும் காங்கிரசுக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும்
தெரிவித்துள்ளது.
ஆக டில்லியில் காங்கிரஸ் ஆட்சி பறிபோகுமா அல்லது, பா.ஜ., ஆட்சி அமைக்குமா
என கருத்துக்கணிப்புகள் ஒவ்வொரு மாதிரியாக இருப்பதால், அரசியல் கட்சியினர்
தலைநகர் ஆட்சிபீடம் குறித்து ஆடிப்போய் உள்ளனர். ஏறக்குறைய பா.ஜ.,
ஆட்சிக்கு வரும் என்பதே மேலான கணிப்பாக உள்ளது.
டில்லி தேர்தலில் மொத்தம் 70 தொகுதிகளுக்கு 809 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.
ஆம் ஆத்மி மீது அவப்பெயர்கள் பரவியது : டில்லியை
பொறுத்தவரை இது வரை 2 கட்சிகளுக்கு இடையேதான் போட்டி இருந்து வந்தது.
ஆனால் ஊழல் மற்றும் லோக்பால் மசோதா , அன்னா ஹசாரே அலை ஆகியவற்றின்
சந்தர்ப்ப சூழலில் ஆம் ஆத்மி என்ற புதிய கட்சி உதயமானது. இந்த கட்சிக்கு
செல்வாக்கு இருப்பது போல் ஒரு மாயை இருந்தாலும் கடைசி நேரத்தில் இந்த
கட்சிக்கு சில அவப்பெயர்கள் பரவியது. இந்த கட்சி வேட்பாளர்கள் தங்களின்
வேட்பு மனுவை திரும்ப பெற பேரம் பேசப்பட்டது, கட்சி நிதி என்ற பெயரில்
மோசடி, மற்றும் சில காரியங்கள் முடித்து தர எவ்வளவு பணம் தருவீர்கள் என்பன
உள்ளிட்டவை அடங்கிய வீடியோ வெளியானது. இது அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி மீது
மக்களுக்கு கடைசி நேரத்தில் முழு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த
கட்சிக்கு கணிசமான ஓட்டு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
Comments