ஜெ.,- மோடி நட்பு: விஜயகாந்த் குழப்பம்: பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணிக்கு சிக்கல்

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கடைசி நேரத்தில், அ.தி.மு.க., ஆதரவு நிலையை எடுத்தால், என்ன செய்வது என, விஜயகாந்த் யோசிப்பதால், பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணி அமைப்பதில், சிக்கல் உருவாகி உள்ளது.
தயக்கம்:

'காங்., - பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி இல்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்த பிறகு, தமிழகத்தில், புதிய கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கு முன் வரை, காங்., கூட்டணியை விரும்பிய, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தற்போது தயக்கம் காட்டுகிறார்; பா.ஜ., கூட்டணியில் சேர ஆர்வத்துடன் உள்ளார்.ஆசை இருந்தாலும், பா.ஜ., கூட்டணியில் இணைவதற்கு, விஜயகாந்த் தயக்கம் காட்டுவதாக, தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, விஜயகாந்திற்கு நெருக்கமான தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சட்டசபையில், கூட்டணி தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதா, 'தே.மு.தி.க., பெற வேண்டிய ஏற்றங்களை என்னால் பெற்று விட்டது; இனிமேல், அந்த கட்சிக்கு இறங்குமுகம் தான்' என, கூறினார்.அதனால், லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வை காட்டிலும், தே.மு.தி.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம்தான், அவருக்கு மேலோங்கி இருக்கும். அதற்காக ஜெயலலிதா எதையும் செய்யக்கூடும் என, விஜயகாந்த் நினைக்கிறார்.


உடைத்து விடுவார்:


இதை எங்களிடமும் அடிக்கடி அவர் நினைவுப்படுத்தி வருகிறார். தே.மு.தி.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்தால், மோடியுடன் தனக்குள்ள நட்பை பயன்படுத்தி, கடைசி நேரத்தில், அதை ஜெயலலிதா உடைத்து விடுவார்.நான்கு, 'சீட்' கொடுத்து, தமிழக பா.ஜ.,வினரை தங்கள் பக்கம் அவர் இழுத்துக் கொள்வார். அதனால், கடைசி நேரத்தில், தே.மு.தி.க.,விற்கு சிக்கல் ஏற்படும் என, விஜயகாந்த் கருதுகிறார்.'பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணி சுமூகமாக அமையும். அது குறித்து, விஜயகாந்த் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்' என்ற உத்தரவாதத்தை தர, தமிழக பா.ஜ., நிர்வாகிகள், இதுவரை முன்வரவில்லை. அதனால், தான் பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு நடத்த, விஜயகாந்த் தயங்குகிறார். இப்போதுள்ள சூழ்நிலையை பார்க்கும்போது, மோடி நேரடியாக விஜயகாந்திற்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே, அவருக்கு நம்பிக்கை ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Comments