சென்னை
அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் சுயசரிதையான,
'நெஞ்சுக்கு நீதி'யின் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா, நேற்று மாலை நடந்தது.
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோகுலகிருஷ்ணன், முதல் பிரதியை வெளியிட,
கவிஞர் வைரமுத்து பெற்றுக் கொண்டார்.
லோக்சபா
தேர்தலில், கூட்டணி வைத்து தான், தி.மு.க., போட்டியிடும். கூட்டணி யாருடன்
வைப்பது என்பது பற்றி, இன்று நடக்கும் பொதுக்குழுவில் முடிவு
செய்யப்படும். திராவிட இயக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கூட்டணி
அமைக்கப்படும். யாருடன் கூட்டணி என, இப்போதே கேட்காதீர்கள்; அது, பிணியாக
முடிந்துவிடும். கட்சித் தலைமை அமைக்கும் கூட்டணியை ஏற்று, லோக்சபா
தேர்தலில் வெற்றி பெற, கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பாடுபட வேண்டும்.
நெஞ்சுக்கு நீதியின் அடுத்த பாகங்கள் வெளிவருவது, இயற்கையின் கையில்
உள்ளது. இந்நூலில் பல்வேறு செய்திகளை கூறியுள்ளேன். அதில், தி.மு.க., ஆட்சி
கலைக்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளேன். 1976, 1989ல், தி.மு.க., ஆட்சி
கலைக்கப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் உதவி
செய்வதாகக் கூறியே கலைத்தனர். 1989ல், கவர்னரின் பரிந்துரை இல்லாமல்,
பிரதமரும், ஜனாதிபதியும் சேர்ந்து, ஆட்சியைக் கலைத்தனர். அப்போது,
ஜனாதிபதியாக இருந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, ஆர்.வெங்கட்ராமன்.
தி.மு.க.,வுக்கு, 143 எம்.எல்.ஏ.,க்கள் பலம் இருந்தபோது ஆட்சியைக்
கலைத்தனர். அப்போது, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், அதற்கு,
அழுத்தம் கொடுத்தனர். ஈழத் தமிழர்களுக்கு, தி.மு.க., என்ன செய்தது என,
கேட்பவர்களுக்கு, அதற்காக, இரு முறை ஆட்சியைப் பறிகொடுத்தோம் என்பதை
சொல்கிறேன். நான் சட்டசபையில், முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும்
பணியாற்றியுள்ளேன். சட்ட மேலவை மற்றும் சட்டசபைக்கு, 13 முறை தேர்வு
செய்யப்பட்டுள்ளேன். ஆனால், மூன்று ஆண்டுகளாக, நடக்க முடியாத நிலையில்,
சட்டசபைக்கு செல்லவில்லை; சென்றாலும், அங்கு, நான் அமருவதற்கு ஏதுவான
இருக்கை இல்லை. இதோடு, சட்டசபை சென்று பேசினால், குண்டு கட்டாகத் தூக்கி
வெளியேற்றி விடுவர். இதனால், கட்சித் தொண்டர்களிடையே, கொதிப்பு
ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, சட்டசபை செல்வதைத் தவிர்த்து வருகிறேன்;
இருந்தும், கோபாலபுரத்தில் உள்ள என் வீட்டைச் சுற்றி, எவ்வளவு தரக்குறைவாக,
என்னை விமர்சித்து போஸ்டர்கள் வைக்கப்படுகின்றன. தமிழகத்தின், அரசியல்
நாகரிகம் இப்படித் தான் சென்று கொண்டுள்ளது. விளம்பர வெளிச்சத்தில் அரசு
உள்ளது. அரசே, குடிநீரை, 10 ரூபாய்க்கு விற்கிறது. அதிலும், தரத்தில்
பாகுபாடு கொண்டு வினியோகிக்கப்படுகிறது. இதை, முதல்வர் தலைமையில்,
சென்னையில் நடந்த, கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பார்க்க
முடிந்தது. இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
Comments