இலங்கை வீரர்களுக்கு பயிற்சியா ? கொதிக்கிறார் முதல்வர் ஜெ.,

சென்னை: இந்திய கடற்படை மூலம் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதாக வந்துள்ள தகவல் குறித்து தாம் அதிர்ச்சி அடைவதாகவும், இந்த பயிற்சி தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்றும் தமிழக முதல்வர் ஜெ., பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். 
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பி.டெக் படிப்பு மூலம் இலங்கை வீரர்களுக்கு கடற்படையில் , தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அரசு இது போன்று தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருவது குறித்து நான் பல முறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் இதுவரை மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இந்தியாவில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது. இதனை நிறுத்த வேண்டும். இந்தியாவின் இந்த நிலைக்கு முழு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஜெ., கூறியுள்ளார்.

டீசல் விலை உயர்வு: டீசல் விலை உயர்வுக்கும் முதல்வர் ஜெ,. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏழை , எளிய மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றுவதற்கு சமமாகும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கேட்டுள்ளார்.

சமீபத்தில் இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா தரப்பில் யாரும் பங்கேற்க கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். ஆனால் கடும் எதிர்ப்பில் இருந்து தப்பிக்க பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காமல், இந்தியா தரப்பில் வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை அனுப்பி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

Comments