சொத்து மதிப்பை குறைத்து காட்டிய அரசியல்வாதிகள் !

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், லோக்சபா சபாநாயகர் மீராகுமார் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்களது சொத்துக்கணக்குகளை குறைத்து காட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த மார்ச் 2003ம் ஆண்டு சுப்ரீம கோர்ட் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில் பார்லிமென்ட் மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் பொது மக்களின் ஊழியர்கள். அவர்கள் மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற தங்களது வருமானம் மற்றும் சொத்துக்கணக்குகளை வெளியிட வேண்டும் என கூறியது.


ஆனால் காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் பார்லிமென்ட் கட்சி தலைவர்கள், மாநில கட்சிகள் மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநில முதல்வர்கள் தங்களது உண்மையான சொத்துக்கணக்கை சமர்ப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது. சில அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சொத்துக்கணக்குகளை குறைத்து காட்டியுள்ளனர். தங்களது சொத்து மதிப்பை சந்தைவிலையை விட குறைத்து காட்டியுள்ளனர். கட்சி தலைவர்கள் வெளியிட்ட சொத்துக்கணக்குகள் வெளியிட்டு அடுத்த 5 ஆண்டுகளிலும் அதன் மதிப்பு கூடவில்லை. அடுத்த தேர்தலிலும் சொத்து மதிப்பு அதேளவில் உள்ளது. இதன்படி

காங்கிரஸ் தலைவர் சோனியா: காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா கடந்த 2004 மற்றும் 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது தனக்கு டில்லியின் மெஹ்ராவ்லி பகுதியில் உள்ள நிலம், சுல்தான்பூர் கிராமத்தில் உள்ள நிலங்களின் மதிப்பு ரூ.2.19 லட்சம் என கூறியுள்ளார். இது சந்தை மதிப்பை விட குறைத்து காட்டப்பட்டுள்ளது. இதே பகுதியில் அதேபகுதியில் நிலத்தின் மதிப்பு ரூ.18.37 கோடி என பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்: கடந்த 2009ம் ஆண்டு பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், லக்னோவின் கோம்தி நகரில் ரூ.55 லட்சம் அளவுக்கு வீடு உள்ளதாக கூறியிருந்தார். ஆனால், வீட்டின் அளவு குறிப்பிடப்படவில்லை.

மீராகுமார்: கடந்த 2009ம் ஆண்டு சபாநாயகர் மீராகுமார் தனக்கு டில்லியில் பிரண்ட்ஸ் காலனியில் ரூ.2.4 கோடி மதிப்பில் ஒரு வீடும், மகாராணி பாக் பகுதியில் ரூ.4.95 கோடி மதிப்பில் வீடு ஒன்றும் உள்ளதாக கூறியிருந்தார். ஆனால் அந்த பகுதியில் நிலங்களின் அப்போதைய சந்தை மதிப்பு முறையே ரூ.12 கோடி மற்றும் ரூ.26 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பி.ஜே.குரியன்: ராஜ்யசபா துணைத்தலைவர் பி.ஜே.குரியன், தமிழகத்தின் தென்காசி பகுதியில் ரூ.1.09 லட்சம் மதிப்பில் நிலம் உள்ளதாக கூறியிருந்தார். ஆனால் அப்போது, சந்தை மதிப்பில் அந்த நிலத்தின் மதிப்பு 5 லட்சம் என தெரியவந்துள்ளது.

ஷீலா தீக்சித்: டில்லியின் கிழக்கு நிசாமுதீன் பகுதியில் ரூ.98.39 லட்சம் மதிப்பில் வீடு உள்ளதாக டில்லி முதல்வர் ஷீலா தீக்சித் கூறியுள்ளார். ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் அந்த வீட்டின் மதிப்பு ரூ.5 கோடி வரை இருக்கும் என கூறியுள்ளனர்.

சுஷில் குமார் ஷிண்டே: கடந்த 2009ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, டில்லியில் தனக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்று உள்ளதாக கூறியிருந்தார். மேலும் மும்பையின் பந்தரா பகுதியில் ரூ.1.29 கோடி அளவுக்கு பிளாட் ஒன்று உள்ளதாகவும் கூறினார். ஆனால் டில்லி வீட்டின் சந்தை மதிப்பு ரூ.2 கோடி என்றும், மும்பை பிளாட்டின் மதிப்பு ரூ.2.5 கோடி என்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் கூறியுள்ளனர்.

சுஷ்மா சுவராஜ்: லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஜந்தர் மந்தர் பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பில் வீடு ஒன்றும், ரூ.1.13 கோடி மதிப்பில் மற்றொறு வீடு ஒன்றும் உள்ளதாக அறிவித்துள்ளார். மும்பையில் ரூ.1.39 கோடி அளவுக்கு வீடு ஒன்று உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாயாவதி: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, கடந்த 2012ம் ஆண்டு, டில்லியின் கொனக்ட் பகுதியில் ரூ.9.39 கோடி மற்றும் ரூ.9.45 கோடி மதிப்பில் இரண்டு கடைகள் உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அவற்றின் மதிப்பு முறையே ரூ.12 கோடி மற்றும் ரூ.15 கோடி என கூறப்படுகிறது. சாணாக்யாபுரியில் ரூ.61. 86 கோடி மதிப்பில் வீடு உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் அந்த பகுதியில் ஒரு சதுர அடி நிலம் ரூ.1.92 லட்சம் முதல் ரூ.3.88 லட்சம் வரை விலைபோகும் என கூறியுள்ளனர். இதன்படி அந்த வீட்டின் மதிப்பு ரூ429 கோடி வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Comments