கத்தோலிக்க
திருச்சபையில், பிரசன்டேசன் சிஸ்டர்ஸ் அமைப்பை நிறுவிய, நானோ நேகிளை,
மரியாதைக்கும் கண்ணியத்துக்கும் உரியவர் என, அக்டோபர் மாதம், வாடிகன்
வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெரிவிக்கப்பட்டது.
இது, புனிதர்
பட்டத்துக்கான, முதல் நிலையாகும். வாடிகன் வெளியிட்ட அறிவிப்பை கொண்டாடும்
நிகழ்ச்சி, சென்னையிலுள்ள, சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில் நேற்று,
நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, சென்னை மயிலை பேராயர், ஜார்ஜ்
அந்தோணிசாமி, இந்தியாவுக்கான அயர்லாந்து சிறப்பு தூதர், ராஜீவ் மேச்சேரி
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், பேராயர் ஜார்ஜ்
அந்தோணிசாமி பேசியதாவது: நானோ நேகிள், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும்
என்பதற்காக, தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தவர். அவருடைய காலத்தில், கல்வி
அத்தியாவசிய தேவையாக இருந்தது; இன்றும், கல்வி அத்தியாவசிய தேவையாக இருந்த
போதிலும், இன்னும் சில தேவைகள் இருப்பதை, சகோதரிகள் உணர வேண்டும்.
இறைவார்த்தையையே, வேதமாக நினைத்து செயல்படும் சகோதரிகள், அவருடைய
வார்த்தைகள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் எனில், நிகழ்காலத்தின் தேவையை
உணர்ந்து, சேவை புரிய வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர், பேஸ்புக்கே கதி
என, இருக்கின்றனர்; இது தவறு. இதனால், நான் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு
எதிராவன் என, நினைக்க கூடாது. ஒரு நாளில், பல மணிநேரங்களை அதில்
செலவழிப்பதை மட்டுமே தவறு என்கிறேன். நானோ நேகிள் காலத்தில், தொலைக்காட்சி
போன்ற ஊடகங்கள் இல்லை. அவருக்கு நிறைய நூல்கள் படிக்க கிடைத்தன. அதனால்,
தான் பயணிக்கப் போகும் பாதையை புரிந்து கொண்டு, அதில் வெற்றியும் பெற்றார்.
இளைய தலைமுறையினர், நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும். அதன் மூலம்,
சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
Comments