பதற்றம் நீடிக்கிறது:
இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்ற காரணத்தால் எப்போதும் பதற்றம் ஏற்படுகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியிலும் பதற்றம் நிலவுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேசிய போது இந்த பதற்றத்தை தணிப்பது குறித்து விவாதித்தார்கள். இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் கோரியது. ஆனால் அந்த யோசனையை இந்தியா நிராகரித்தது. எனவே ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சு நடத்த முடிவெடுக்கப்பட்டது.
வாகா எல்லை பேச்சுவார்த்தை:
அதன்படி பாகிஸ்தான் பக்கமுள்ள வாகா எல்லையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதில் இந்திய தரப்பில் லெப்டினண்ட் ஜெனரல்வினோத் பாதியா, பாகிஸ்தான் தரப்பில் மேஜர் ஜெனரல் அமீர் ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள்.
தற்போது இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் 'ஹாட்லைன்' மூலம் வாரம் ஒரு தடவை பேசுகிறார்கள் என்றாலும் கூட 1999-ம் ஆண்டில் நடந்த கார்கில் போருக்கு பிறகு நேரடியாக சந்திக்கவில்லை.
இந்த சந்திப்பு குறித்து பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பதற்றத்தை தீவிரப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆகவே சுமுக தீர்வு காணும் நோக்கத்துடன் பேச தயாராக இருக்கிறோம்' என்றார். அதேநேரத்தில் எல்லைக்கோட்டு பகுதியில் ஐ.நா.வின் ராணுவ கண்காணிப்பாளர்களை நியமிக்கலாம் என வலியுறுத்துவோம் என்றும் கூறினார்.இன்று நடக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் எல்லை தாண்டும் ஊடுருவல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா? பதற்றம் தணிய வழிபிறக்குமா? என பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுகின்றன.
Comments