சென்னை: கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி
சி.என்.ஆர்.ராவுக்கு, "பாரத ரத்னா' விருது வழங்குவதற்கு எதிர்ப்பு
தெரிவித்து, தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச்
சேர்ந்த, வழக்கறிஞர், என்.கனகசபை என்பவர், தாக்கல் செய்த மனுவில்
கூறியிருந்ததாவது: கடந்த, 1957ல், ஜனாதிபதி பிறப்பித்த அறிவிப்பாணைபடி,
கலை, இலக்கியம், அறிவியல் துறை மற்றும் பொதுசேவையில் சிறப்பாக
செயல்பட்டவர்களுக்கு, "பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும். இதில்,
கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர்,
எந்த பிரிவிலும் வரவில்லை. மேலும்,
டெண்டுல்கர், விஞ்ஞானி ராவுக்கு, "பாரத ரத்னா' விருது வழங்குவதற்கான,
அறிவிப்பாணையும் வெளியிடப்படவில்லை. எனவே, விருது வழங்குவதை, ரத்து செய்ய
வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
மத்திய அரசு
சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், வில்சன் தாக்கல் செய்த மனு: தவறாக
கருதி, இம்மனுவை, மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். 2011, நவம்பரில்,
ஜனாதிபதி பிறப்பித்த அறிவிப்பாணையில், "மனித வளர்ச்சிக்கு, எந்த துறையில்
சிறப்பாக சேவை செய்திருந்தாலும், அதை அங்கீகரிக்கும் வகையில், "பாரத ரத்னா'
விருது வழங்கலாம்' என, கூறப்பட்டுள்ளது. டெண்டுல்கர், விளையாட்டு துறையில்
சிறந்து விளங்கியவர். அவருக்கு ஏற்கனவே, இரண்டாவது பெரிய விருதான, "பத்ம
விபூஷண்' வழங்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர், பேராசிரியர்
சி.என்.ஆர்.ராவுக்கு, "பாரத ரத்னா' விருது வழங்குவதற்கு, ஜனாதிபதிக்கு,
பிரதமர் பரிந்துரைத்தார். அதற்கான கடிதம், நவம்பர், 15ம் தேதி
அனுப்பப்பட்டது. மறுநாளே, அதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இதற்கான,
முறையான அறிவிப்பாணையை, ஜனாதிபதி அலுவலகம் பிறப்பிக்கும். ஜனாதிபதி
மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில், விருது வழங்கப்படும். இவ்வாறு, மனுவில்
கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கறிஞர், கனகசபை தாக்கல் செய்த மனுவை
தள்ளுபடி செய்து, தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி ரவிச்சந்திரபாபு
அடங்கிய, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.
Comments