ஆதர்ஷ் குடியிருப்பு :
மகாராஷ்டிராவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை
ஏற்படு்தியது ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விவகாரம். இந்த ஆதர்ஷ்
குடியிருப்பானது கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்காக அரசு
சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டதாகும். இந்த குடியிருப்பில் உள்ள
பிளாட்டுக்களை 25 பேருக்கு அரசு ஒதுக்கியது. அந்த 25 பேரில், கார்கிலுடன்
எவ்வித தொடர்பும் இல்லாத, தியாகிகள் குடியிருப்பில் சலுகை பெற
தகுதியில்லாத தேவ்யானியும் ஒருவர். மகாராஷ்டிர அரசு விதிகளின்படி அரசு
கோட்டாவில் பிளாட் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு சொந்தமாக வேறு எந்த
பிளாட்டும் இருக்கக் கூடாது என விண்ணப்ப பிரமானப் பத்திரத்தில் குறிப்பிட
வேண்டியது அவசியம். ஆனால் தேவ்யானிக்கு ஆதர்ஷ் குடியிருப்பில் மட்டுமின்றி
வேறு பல இடங்களிலும் பிளாட்கள் உள்ளன.
தேவ்யானி சொத்து விபரம் :
மத்திய
வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி
2012ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி வரை தேவ்யானிக்கு ஆதர்ஷ் குடியிருப்பு
பிளாட் மட்டுமின்றி மேலும் 10 சொத்துக்கள் உள்ளன. ஆதர்ஷ் குடியிருப்பு
பிளாட்டின் மதிப்பு ரூ.90 லட்சம் ஆகும். மற்ற 7 சிறிய சொத்துக்களின்
மதிப்பு ரூ.78 லட்சத்திற்கும் மேல். மேலும் 3 சொத்துக்களின் மதிப்பு
எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. ஒஷிவரா பகுதியில் மீரா ஒருங்கிணைந்த
குடியிருப்பு பகுதியிலும் தேவ்யானிக்கு வீடு உள்ளது. 11 சொத்துக்களில் 5
சொத்துக்கள் மூலம் தேவ்யானிக்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.1.26 லட்சம் வருமானம்
வருகிறது. இவருக்கு மகாராஷ்டிராவில் 8 சொத்துக்களும், கேரளாவின்
எர்ணாகுளத்தில் 2 சொத்துக்களும், உ.பி., மாநிலம் கவுதம புத்தா நகரில் ஒரு
சொத்தும் உள்ளது. மகாராஷ்டிராவில் முறையே 25, 8, 2 ஏக்கர்களில் விவசாய
நிலமும், 2 வீட்டடி மனைகளும், 4 பிளாட்களும் உள்ளன. வெளியுறவுத்துறை
அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த சொத்து விபர அறிக்கையை
மகாராஷ்டிர அரசு நிராகரித்துள்ளது.
அப்பா கொடுத்த பரிசு :
தேவ்யானியின் தந்தை உத்தம் கோப்ரகடே. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர் 31 மாடி ஆதர்ஷ் குடியிருப்பில் அதிக விலை கொடுத்து கூடுதலாக ஒரு பகுதியை வாங்கி உள்ளார். பிரிகன்மும்பை மின் விநியோகத்துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு சொந்தமான இந்த பகுதியை உத்தம் கோப்ரகடே வாங்கி உள்ளார். இந்த பிளாட்டை திருப்பித்தர கூறிய போது, தாங்கள் இந்த பிளாட்டை ஒதுக்கீட்டு கோட்டாவின் கீழ் வாங்கி இருப்பதாகவும், தான் அதற்கு சரியான விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும், எதற்காக திருப்பி அளிக்க வேண்டும் எனவும் உத்தம் கோப்ரகடே தெரிவித்துள்ளார். தேவ்யானியின் சொத்துக்களில் நிலங்கள் உள்ளிட்ட 7 சொத்துக்கள், அவரது தந்தை உத்தம் கோப்ரகடேவால் அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments