சச்சின்:
இந்திய
கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரர்களுக்கு, அரசியல் கட்சிகள், வலை வீசத்
துவங்கியுள்ளன. சச்சின், ஏற்கனவே காங்கிரசின் வலையில் சிக்கியுள்ளார்.
நியமன எம்.பி.,யாக நியமித்ததுடன்,
பாரத ரத்னா விருது வழங்கியும், காங்.,
தலைமையிலான மத்திய அரசு, அவரை குளிர வைத்து உள்ளது. அடுத்த லோக்சபா
தேர்தலில், காங்கிரசுக்கு ஆதரவாக, அவரை பிரசாரம் செய்ய வைக்கவும்,
திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சியான, பா.ஜ.,வும், மாஜி
கிரிக்கெட் வீரர்களை தேடும் படலத்தில் இறங்கியுள்ளது. முன்னாள் வீரர்
நவ்ஜோத் சிங் சித்து, தற்போது, பா.ஜ., எம்.பி.,யாகவுள்ளார். இதைத்
தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட்
ரசிகர்களால், 'தாதா' என, செல்லமாக அழைக்கப்படுபவருமான, மேற்கு வங்கத்தை
சேர்ந்த, கங்குலிக்கு, தூது விடும் நடவடிக்கையை, பா.ஜ., துவக்கிஉள்ளது.
பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, அடுத்த
லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தில், பா.ஜ., சார்பில் போட்டியிடும்படி,
கங்குலிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ., பொதுச்
செயலர்களில் ஒருவரான, வருண் மூலம், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செல்வாக்கு:
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, திரிணமுல், இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்., ஆகிய கட்சிகளுக்கே செல்வாக்கு உள்ளது. பா.ஜ.,வுக்கு குறிப்பிட்டு கூறும்படியான செல்வாக்கு இல்லை.எனவே, கங்குலி மூலமாக, மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வுக்கு, ஓட்டு வங்கியை ஏற்படுத்துவதற்கு, நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் தான், கங்குலிக்கு, அவர், அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கங்குலி கூறியுள்ளதாவது: பா.ஜ.,விலிருந்து, எனக்கு அழைப்பு வந்துள்ளது, உண்மை தான். ஆனால், வேறு சில வேலைகளில், நான், 'பிசி'யாக இருக்கிறேன். இன்னும் சில நாட்களுக்கு பின், யோசித்து முடிவை அறிவிப்பேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Comments