புதுடில்லி : தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கும்,
ஆந்திர அரசுக்கும் இடையே நிலவி வரும் மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
தெலுங்கானா தொடர்பான மசோதாவையும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திருப்பி
அனுப்பி உள்ளதால் தெலுங்கானா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன்
காரணமாக பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் 4வது நாளாக இன்றும் முடங்கி
உள்ளது.
தனி தெலுங்கானா :
லோக்சபா தேர்தலுக்கு முன் ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா
அமைக்க வேண்டும் என்பது காங்கிரசின் விருப்பம். ஆனால் தனி தெலுங்கானாவிற்கு
ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்
எதிர்ப்பு தெரிவித்து வருவதால் லோக்சபா தேர்தலுக்கு முன் தெலுங்கானா மாநில
அமைப்பதற்கான சாத்திய கூறுகள் மிக குறைவாகவே உள்ளது. தனி தெலுங்கானா
அமைப்பதற்கு ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்களும் எதிர்ப்பு
தெரிவித்து வருவதால் ஏற்கனவே மழைக்கால கூட்டத்தொடர் முடங்கிய நிலையில்,
தற்போது குளிர்கால கூட்டத்தொடரும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாபதிபதி நிராகரிப்பு :
தனி
தெலுங்கானா அமைக்கும் மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பி
இருந்தது. ஆனால் இது ஆந்திர சட்டசபையின் ஒப்புதலை முதலில் பெற வேண்டியது
அவசியம் எனக் கூறி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அம்மசோதாவை ஆந்திர
சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் மசோதா தொடர்பாக 6
வாரங்களுக்குள் பதிலளிக்கவும் ஆந்திர சட்டசபைக்கு அவர் காலக்கெடு
விதித்துள்ளார். தற்போதைய அரசின் கடைசி பார்லி., கூட்டம் அடுத்த மாதம்
நடைபெற உள்ளதாலும், அதில் அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய
உள்ளதாலும், அதன் பின் லோக்சபா தேர்தல் பணிகள் துவங்க உள்ளதாலும் அதற்கு
முன் தனி தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் மசோதாவிற்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகம் உள்ளது.
காங்கிரஸ் திட்டம் :
லோக்சபா தேர்தலுக்கு முன் தனி தெலுங்கானாவை உருவாக்கி, அதில் 19 லோக்சபா தொகுதிகளை ஏற்படுத்த காங்கிரஸ் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. தனி தெலுங்கானாவை அமைப்பதாக கூறியே 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் தொடர்ந்து எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் காரணமாக தெலுங்கானா விவகாரத்தில் இன்று வரை முடிவு ஏற்படவில்லை. தனி தெலுங்கானா அமைக்க வேண்டும் என பா.ஜ., தெலுங்கு தேச கட்சி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தென்மாநிலங்களில் பலத்தை பெருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் அரசு உள்ளது. ஆந்திராவில் தெலுங்கானா பிரச்னையையும், தமிழகத்தில் திமுக கூட்டணியை புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்திலும் காங்கிரஸ் உள்ளது.
Comments