முதல்வரை குளிர்விக்க சாலையை விழுங்கிய பேனர்கள் : நெரிசலில் திணறிய சென்னை

சென்னை: அ.தி.மு.க.,வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற முதல்வரை வரவேற்று, போயஸ் தோட்டம் முதல் வானகரம் வரை, சாலைகளை ஆக்கிரமித்து கட்சியினர் வைத்திருந்த பேனர்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை, மதுரவாயல் அடுத்த வானகரத்தில் நேற்று நடந்த, அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர், ஜெயலலிதா நேற்று மதியம் புறப்பட்டார்.
ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் ஹாரிங்டன் சாலை வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடைந்த அவர், கோயம்பேடு மேம்பாலம் வழியாக, வானகரத்திற்கு சென்றடைந்தார். இதற்காக, கடந்த, இரண்டு தினங்களாக சாலையோரத்தை கட்சியினர் ஆக்கிரமித்து, வரவேற்பு பேனர்களை அமைத்து இருந்தனர். அதிகளவில் பேனர் வைத்தால், பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம்; புதிதாக பதவி கிடைக்கும், இதுபோன்ற அதீத ஆசையால், அ.தி.மு.க.,வினர், அவரவர் வசதிக்கு ஏற்ப, வரவேற்பு பேனர்களை வைத்து இருந்தனர்.

மெகா சைஸ் பேனர்கள், சாலையின் மையப்பகுதி வரை, ஆக்கிரமித்துக் கொண்டதால், சாலைகள் குறுகலாகி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலையோரங்களில் மேடை அமைத்து, அ.தி.மு.க.,வினர் ஆங்காங்கே கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்ததால், அவற்றை வேடிக்கை பார்ப்பவர் எண்ணிக்கை அதிகரித்து, வாகனங்கள் நகர முடியாத நிலையும் ஏற்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க.,வினர், சாலையோரத்தை ஆக்கிரமித்து, வாகனங்களை நிறுத்தியதால், கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள், நகர முடியாமல், பல மணி நேரம் சிக்கித் தவித்தன

Comments