' ஆமாம், நாங்கள் திருடர்கள் தான் ' காங்., நிம்மதியை திருடியவர்கள்;மோடி

வாரணாசி: கங்கை நதி தாயை போன்றது. இதனை தூய்மைபடுத்த காங்., அரசு தவறி விட்டது. இந்த நதிக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் எங்கே ஆற்றில் மூழ்கி போனதா? கங்கை சுத்தம் அடைய வேண்டுமானால் நாம் முதலில் டில்லியில் உள்ள மத்திய அரசை சுத்தம் செய்ய வேண்டும். டில்லியில் சுத்தப்படுத்த கங்கையில் இருந்து நமது பணியை துவக்குவோம். இவ்வாறு பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசினார். 

உத்தரபிரதேசம், வாரணாசியில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

லோக்சபா தேர்தல் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது. மத்தியில் நடந்து வரும் ஆட்சியை வேரோடு பறித்து எறிய மக்கள் முடிவு செய்துவிட்டனர். கங்கை நமது தாய் போல. ஆனால், அதை சுத்தம் செய்யாமல், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான ஒதுக்கப்பட்ட நிதி, கங்கையில் மூழ்கிவிட்டதா? கங்கையின் பெயரை கூறி காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது. காங்கிரஸ் மக்களை ஏமாற்றிவிட்டது. எனவே, மக்கள் அக்கட்சிக்கு வரும் தேர்தலில் பாடம் கற்பிப்பார்கள். கங்கையை சுத்தப்படுத்த வேண்டுமானால் நாம் முதலில் டில்லியில் உள்ள அதிகாரத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

நாங்கள் சொல்வதை செய்வோம் : நான் சொல்வதை செய்வேன். குஜராத்தில் சொன்னதை செய்து காட்டி உள்ளோம். அங்கு, சபர்மதி நதியை சுத்தப்படுத்தி உள்ளோம். சாபர்மதி சுத்தம் செய்யப்படும் போது, ஏன் கங்காவை சுத்தப்படுத்த முடியாது? நாங்கள் எப்போதுமே பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதில்லை. சொல்வதை செய்வோம். ஆனால், இங்கு வாக்குறுதிகளை கேட்டு, கேட்டு மக்கள் விரக்தியடைந்துவிட்டனர். எனவே, வாக்குறுதிகளை செயலில் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் சக்தி தான் வழிகாட்டப் போகிறது. விவசாயிகள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி படைத்தவர்கள். ஆனால், ஊருக்கே உணவளிக்கும் அவர்கள் ஒரு வேளை உணவை தேடும் நிலையில் உள்ளனர். யாரும் பசியால் இறந்துவிடக்கூடாது என விவசாயிகள் எண்ணுகின்றனர். அவர்களுக்கு பணம் பெரியதல்ல. மக்கள் நலனே முக்கியம் என எண்ணுபவர்கள். ஆனால், விவசாயிகளின் புனிதமான இந்த நிலையை அரசு அறிந்து கொள்ளவில்லை. மாறாக, விளைபொருட்கள் மது தயாரிப்பதற்கு அனுப்பப்படுகின்றன. இது, விவசாயிகளின் கொள்கைகளுக்கு அவமதிப்பாகும்.

வரும் லோக்சபா தேர்தல் என்பது அரசியல்வாதிகளுக்கு இடையில் நடக்கும் போட்டி அல்ல. மக்களுக்கும், காங்கிரசுக்கும் இடையில் நடக்க உள்ள போட்டி. நாடு இப்போதுள்ள மோசமான சூழ்நிலைக்கு ஒரே ஒரு குடும்பம் மட்டுமே பொறுப்பு. அது ஏழைகளை வெறுக்கிறது. என் மீது குறிவைத்துள்ளது, இதனால் தான், என்னை டீ கடைக்காரன் என்று வர்ணிக்கிறது. மத்தியில் அந்த ஆட்சியை அகற்றுவதற்கு இதுதான் நேரம். எங்களை திருடர்கள் என்கிறார்கள். ஆமாம், நாங்கள் திருடர்கள் தான். காங்கிரசின் தூக்கத்தையும், நிம்மதியையும் திருடியவர்கள்.

மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து ஜவுளிகளை இறக்குமதி செய்கிறது. ஆனால், உள்நாட்டு உற்பத்தியாளர்களை அது ஊக்குவிப்பதில்லை. அரசின் மோசமான திட்டங்களால், மக்கள் வாழ்வாதரங்களை இழந்து, இடம் பெயர வேண்டி உள்ளது. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தால்:

* புனிதமான கங்கை நதி சுத்தப்படுத்தப்படும்

* விவசாயிகள் நலனில் அக்கறை காட்டப்படும்

* தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்படும்.

* உள்நாட்டு ஜவுளி உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.

* மக்களின் வளமான எதிர்காலம் உறுதி செய்யப்படும்

* இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மோடி பேசினார்.

Comments