பிரதமரை முன் மாதிரியாக கொண்டு நடக்க கெஜ்ரிவாலுக்கு ஷிண்டே அட்வைஸ்

மும்பை : கூட்டணி அரசை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங்கை உதாரணமாகக் கொண்டு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிவுரை வழங்கி உள்ளார்.

டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்ற அடுத்த நாளே மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இந்த அறிவுரையை வழங்கி உள்ளார். செய்தியாளர்களுக்கு ஷிண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது :
கூட்டணி அரசை வழிநடத்துவது எளிதான வேலை இல்லை; தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அதில் அதிக கவனம் கொள்ள வேண்டும்; அரவிந்த் கெஜ்வால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; காங்கிரஸ் அவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும்; அரசு முறையாக செயல்பட வேண்டும் என்ற எங்களின் கொள்கையில் தெளிவாக இருக்கிறோம்; ஆனால் தலைமை பொறுப்பில் இருக்கும் கெஜ்ரிவால் கவனமாக பேச வேண்டும்; கூட்டணி அரசை எவ்வாறு சுமூகமாகவும், சிறப்பாகவும் நடத்த வேண்டும் என்பதில் மன்மோகன் சிங்கை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; அந்த சிரமமான பணியை சிறப்பாக செய்வதில் நாட்டிற்கு முன் உதாரணமாக திகழ்பவர் மன்மோகன் சிங். இவ்வாறு ஷிண்டே தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று பொது மக்கள் பலர், முதல்வர் கெஜ்ரிவாலை அவரது வீட்டிற்கு சென்று பார்த்து குறைகளை கூறினர். சாலையோரம் வசிக்கும் மக்களும், ஒப்பந்த பணியாளர்களும், தங்களின் பிரச்னைகளும் நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும், இதற்கு முன் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான அரசு தங்களை புறக்கணித்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்களின் குற்றச்சாட்டுக்களும், ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே கெஜ்ரிவால் அதிரடியாக செய்த மாற்றங்களும் மத்தியில் ஆளும் காங்கிரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பதவியேற்ற அடுத்த நாளே கெஜ்ரிவாலுக்கு அறிவுரை வழங்குவது போல், மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ள ஷிண்டேவின் பேச்சு காங்கிரசின் அச்சத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அளித்துள்ள ஆதரவை எந்நேமும் விலக்கி கொள்ள வாய்ப்பு இருப்பதும், ஆதரவை காரணமாக வைத்து கெஜ்ரிவால் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதும் தெளிவாகி உள்ளது.

Comments

ASK RAJU said…
like P.M you also should not open your mouth.