தேர்தல் புறக்கணிப்பு கட்சிகளுக்கு "நோட்டா'வால் வந்தது சிக்கல்!

ஏற்காடு தேர்தலில் நடுநிலை வகிப்பதாகவும், புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ள கட்சி நிர்வாகிகளை, அ.தி.மு.க., தி.மு.க., நிர்வாகிகள் வளைத்து போட்டு வருகின்றனர்.

முதல் முறையாக ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், "நோட்டா' பட்டன் அறிமுகப்படுத்தியதால், தேர்தலை புறக்கணித்த கட்சிகளின் தொண்டர்கள், "நோட்டா' பட்டனை அழுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
அதை மீறி, அவர்கள் மாற்று கட்சிக்கு ஓட்டளித்தால், "நோட்டா'வில் பதிவாகும் ஓட்டு எண்ணிக்கை குறையும். புறக்கணிப்பு கட்சிகள் யாருக்கு ஓட்டளித்தனர் என்ற கேள்வி எழும்போது, அக்கட்சியின் சாயம் வெளுக்கும் நிலை உருவாகும். ஏற்காடு தேர்தலில், காங்கிரஸ், தே.மு.தி.க., ஆகிய கட்சிகள், புறக்கணிக்கிறதா அல்லது எந்த கட்சியையாவது ஆதரிக்கிறதா என்பதை இதுவரையில் தெளிவுபடுத்தவில்லை. அதேசமயம், பா.ம.க., தேர்தலை புறக்கணிப்பதாக வெளிப் படையாக அறிவித்து உள்ளது.

ஏற்காடு தொகுதியை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு, 15 சதவீதம், 35 ஆயிரம் ஓட்டுகளும், பா.ம.க.,வுக்கு, 25 சதவீதம், 60 ஆயிரம் ஓட்டுகளும், தே.மு.தி.க.,வுக்கு, 12 சதவீதம், 26 ஆயிரம் ஓட்டுகளும் இருப்பதாக, அக்கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது. இந்த தொகுதியில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 2.40 லட்சம். இதில், தேர்தலை புறக்கணிப்பது, நடுநிலை வகிப்பது என, அறிவிப்பு செய்துள்ள கட்சிகளின் ஓட்டுகள் என்ற வகையில், 98 ஆயிரம் ஓட்டு யாருக்கும் கிடைக்க கூடாது. ஓட்டு பதிவு செய்யாமல் இருப்பது, ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறும் செயல் என, கருதும் கட்சியினரின் ஓட்டுகள் அனைத்தும், 49 (0) யாருக்கும் ஆதரவு இல்லை என்ற வகையில் ஓட்டளிக்க வேண்டும். முதல் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வாக்காளர்களின் பெயருக்கு கீழே கடைசியாக, "நோட்டா' என்ற பட்டன் அறிமுகப்படுத்தி உள்ளனர். யாருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லாதவர்கள், இந்த பட்டனை அழுத்த வேண்டும். அந்த வகையில், தேர்தலை புறக்கணித்துள்ள, பா.ம.க., மற்றும் யாருக்கு ஆதரவு என்பதை தெளிவுபடுத்தாமல், மவுனம் காக்கும், காங்., தே.மு.தி.க., ஆகிய கட்சிகளின் வாக்குகளும், "நோட்டோ'வுக்கு விழும் பட்சத்தில், இந்த இடைத்தேர்தலில், இரண்டாம் இடம் பெறும் வேட்பாளரைவிட, "நோட்டா'வுக்கு விழும் வாக்குகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், தற்போது ஏற்காட்டில் நிலவும் சூழல், காங்., தே.மு.தி.க., மற்றும் பா.ம.க., வாக்காளர்களை, அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய கட்சியினர், தங்கள் பக்கம் இழுக்கும் வித்தையை கையாண்டு வருகின்றனர்.

ஏற்காடு தொகுதியில், பா.ம.க., தே.மு.தி.க., காங்., நிர்வாகிகளை அமைச்சர்கள், நிர்வாகிகள் சந்தித்து, அவர்களின் தொழில், வர்த்தகம் மட்டுமின்றி, வாரிசுகளுக்கான வேலைகளுக்கும் உதவுவதாக கூறி, பரிந்துரை உள்ளிட்ட சலுகைகளை வாரி வழங்கியுள்ளனர். இதே போல், தி.மு.க.,வும் களம் இறங்கி உள்ளது. இதனால், ஓட்டளிக்க வருபவர்கள், தங்கள் கட்சி தலைமைக்கு கட்டுப்பட நினைப்பர். தங்களின் ஓட்டுகளை, "நோட்டா'வுக்கு போட வேண்டும். ஆனால், பணம், பொருட்கள் வழங்கிய கட்சிக்கு போடும் பட்சத்தில், "நோட்டா'வுக்கான ஓட்டு எண்ணிக்கையில் குறைவு ஏற்படும். அவ்வாறு பணம், பொருட்களுக்கு, புறக்கணிப்பு கட்சி ஆதரவாளர்கள், விலை போகும் பட்சத்தில், முதல்கட்டமாக ஏற்காடு தொகுதியில், தே.மு.தி.க., காங்., மற்றும் பா.ம.க., போன்ற கட்சிகளின் சாயம் வெளுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில், "நோட்டோ'வின் வரவு, புறக்கணிப்பு கட்சி நிர்வாகிகளுக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Comments