"என் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த்

"என் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், திடீர் நிபந்தனை விதித்துள்ளதை அடுத்து, அக்கட்சியின் வரவை எதிர்பார்த்து, வலை

டில்லி மாநில தேர்தலில், 11 தொகுதிகளில் போட்டியிடும், தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ஐந்து நாட்கள், பிரசாரம் செய்தார் விஜயகாந்த். கடைசி நாளில், டில்லியில் நிருபர்களை சந்தித்து, பரபரப்பு பேட்டி அளித்தார்."லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டு சேருவீர்களா?' என்ற கேள்விக்கு, "என் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமைப்பேன்' என, விஜயகாந்த், பதிலளித்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளார்.
விஜயகாந்தின் இந்த அதிரடி அறிவிப்பு, தமிழக கட்சிகள் மத்தியில் விவாதத்தையும், அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தையும் கிளப்பி உள்ளது. மிக முக்கியமாக, இது, தி.மு.க., தலைமைக்கு சொல்லப்பட்ட, "மெசேஜ்' என்பதால், அந்த கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க., தலைமையில், தற்போதுள்ள அணியை வலுப்படுத்த, தே.மு.தி.க.,வுக்கு, அந்த கட்சி வலை விரித்திருந்தது. ராஜ்யசபா தேர்தலில் விரிக்கப்பட்ட அந்த வலை, ஏற்காடு இடைத் தேர்தல் வரையில் தொடர்ந்தது.

ஏற்காடு இடைத் தேர்தலில், பிற கட்சிகளின் ஆதரவை விட, தே.மு.தி.க.,வின் ஆதரவை தான், தி.மு.க., பெரிதும் விரும்பியது. அதனால்தான், தே.மு.தி.க.,வுக்கு ஆதரவு கேட்டு, கருணாநிதி கடிதம் அனுப்பினார். விஜயகாத்துக்காக அனுப்பப்பட்ட ஓலை என்பதை மறைப்பதற்காகவே, மற்ற கட்சிகளுக்கும் ஆதரவு கடிதம் போனதாக, அப்போதே, விமர்சனங்கள் எழுந்தன.இடைத் தேர்தல் ஆதரவு முடிவை வைத்து, லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு, அடித்தளம் போட்டு விடலாம் என்பதால், அந்த எதிர்பார்ப்பு, தி.மு.க.,விடம் அதிகம் காணப்பட்டது.ஆனால், ஏற்காட்டில் ஆதரவு அளிக்க மறுத்த விஜயகாந்த், இப்போது, "தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் சேர முடியாது'என்பதை, சூசகமாக சொல்லி விட்டார்.விஜயகாந்த்தின் திடீர் அறிவிப்பால், இரு கட்சிகளும் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.இதுகுறித்து, தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், "விஜயகாந்த் தலைமையை ஏற்க, பலமான மாநில கட்சிகள் முன்வராது. வேண்டுமானால், தேசிய கட்சிகள் அதற்கு ஒப்புக்கொள்ளலாம்' என்றார்.

சங்கடம்:தி.மு.க.,வை அடுத்து, தே.மு.தி.க.,வை விரும்பும் கட்சிகள், காங்கிரசும், பா.ஜ.,வும் தான். அதிலும், தமிழகத்தில், புதிய கூட்டணியை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள, பா.ஜ., தலைமை ஏற்கனவே, பா.ம.க., மற்றும் ம.தி.மு.க.,வுடன் பேசி வைத்துள்ளது. நரேந்திர மோடி பிரதமர் ஆக, இவ்விரு கட்சிகளும் ஆதரவு தர, கூட்டணியில் சேர சம்மதம் தெரிவித்துள்ளன.அதைத்தொடர்ந்து, தே.மு.தி.க.,வுடன் பேச்சுவார்த்தையை துவங்க, பா.ஜ., தலைமை நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு, பா.ஜ., தலைமைக்கும் தர்மசங்கடத்தை, விஜயகாந்த் ஏற்படுத்தி விட்டார்.
இதுபற்றி, பா.ஜ., தலைமை வட்டாரத்தில் விசாரித்தபோது, "தமிழகத்தில், பா.ஜ.,வையும் இணைத்து, தே.மு.தி.க., தன் தலைமையில் புதிய அணியை ஏற்படுத்தலாம். ஆனால், அதற்கு மற்றமாநில கட்சிகள் ஒப்புக்கொள்ளாது' எனக் கூறினர்.

ஆனாலும், இந்த அதிருப்தியை வெளிக்காட்டாமல், டில்லியில் முகாமிட்டுள்ள, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், ""டில்லி தமிழருக்காக, விஜயகாந்த் பேசுகிறார். டில்லி தமிழர் மட்டுமல்ல; இலங்கை தமிழர், இந்தியாவில் வாழும் தமிழர் என, உலகம் முழுவதும் வாழும் தமிழருக்காக குரல் கொடுக்க காத்திருக்கிறார் மோடி. அப்படிப்பட்டவர்தான் பிரதமராக வர வேண்டும். அதற்கு, தே.மு.தி.க., போன்ற கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும்,'' என, கேட்டுக் கொண்டார். தமிழக காங்கிரசுக்கும் இதே சிக்கல் தான். ஆனாலும், தி.மு.க.,வுடன் கூட்டு சேரப் போவதில்லை என்கிற தொனியில் விஜயகாந்த பேசியிருப்பது, காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக யோசிக்க வைத்துள்ளது.
விரித்திருந்த, தி.மு.க., கடும் அதிருப்தி அடைந்துள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் பா.ஜ., ஆகிய கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.

Comments