தொடர் புகார்களால் அமைச்சர்கள் கிலி: பதவியை எதிர்பார்த்து எம்.எல்.ஏ.,க்கள் காத்திருப்பு!

சென்னை: சில அமைச்சர்கள் மீது, நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளதால், விரைவில், அமைச்சரவையில் மாற்றம் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புகாருக்கு ஆளான அமைச்சர்கள், கலக்கம் அடைந்துள்ளனர். தங்களுக்கு அமைச்சர் யோகம் வரும் என, சில எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழக முதல்வராக, ஜெயலலிதா, மூன்றாவது முறையாக, பொறுப்பேற்ற பின், அவ்வப்போது, அமைச்சரவையில் மாற்றம் செய்து வருகிறார். இதுவரை, 13 முறை, அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. கடந்த, 30ம் தேதி, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம், இளைஞர்
நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக, இறக்கம் செய்யப்பட்டார். அவரிடம் இருந்த பொதுப்பணித் துறை, நிதித் துறை அமைச்சர் பன்னீர் செல்வத்திடம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. இரண்டு துறைகளும் முக்கியமானவை என்பதால், விரைவில், பொதுப்பணித் துறைக்கும், நீர் பாசன துறைக்கும் தனி அமைச்சர் நியமிக்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


புகார்:

ஏற்காடு இடைத்தேர்தல் முடிந்த பின், தேர்தலில், சிறப்பாக பணி புரிந்தோருக்கு, அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், எம்.எல்.ஏ.,க்கள், தேர்தல் பணியாற்றினர். இச்சூழலில், சில அமைச்சர்கள் மீது, நில அபகரிப்பு புகார் எழுந்திருப்பது, அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை, ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், புதூர் அருக்கம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி, தன் நிலத்தை, அமைச்சர் ராமலிங்கம் ஆதரவுடன், அவரது ஆட்கள் அபகரித்ததாக, ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார். புகார் உண்மையானதா, பொய்யானதா என்பது, விசாரணைக்கு பிறகே தெரியும் என்றாலும், புகார் எழுந்திருப்பதே, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால், தன் மீதிருந்த வழக்கை, வேட்பு மனுவின் போது மறைத்து விட்டதாகவும், சபாநாயகர் தனபால், கூட்டுறவு சங்க நிலத்தை, விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, நில அபகரிப்புப் புகார் எழுந்து, கோர்ட் விசாரணையில் உள்ளது. அதேபோல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, மதுரை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தாக்கலாகி இருக்கிறது.
விசாரணை:

இப்புகார்கள் குறித்து, உளவுத் துறை போலீசார், ரகசிய விசாரணை நடத்தி, முதல்வருக்கு, அறிக்கை அனுப்பி உள்ளனர். இதனால், குற்றச்சாட்டுக்குள்ளானோர், "பதவிக்கு சிக்கல் வருமோ...' என, கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதியும், "அமைச்சர்கள் மீதான புகாருக்கு, தமிழக அரசு என்ன பதில் அளிக்கப் போகிறது?' என, தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். தற்போது, ஏற்காடு தேர்தல் முடிந்துள்ள நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளார் மீது, முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அமைச்சரவையில் மாற்றம் வருவது உறுதி என்ற நம்பிக்கையுடன், அமைச்சர் பதவியை எதிர்பார்த்து எம்.எல்.ஏ.,க்கள், ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Comments