ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்தார் ; மேலும் விலக சில அமைச்சர்கள் தயார்

புதுடில்லி: மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கட்சி பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், இன்னும் பல அமைச்சர்கள் பதவியில் இருந்து விலக்கி கொள்ள சில பெயர்கள் கொண்ட பட்டியல் தயாராக இருப்பதாகவும் டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. 
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரசாரம் நாடு முழுவதும் பெரும் ஆதரவலையை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்து கொள்ளும் என்று கட்சி தலைவர் சோனியா மற்றும் ராகுல் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இன்று தனது பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். இவரது ராஜினாமாவை ஜனாதிபதி அலுவலகம் ஏற்று கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இலாக்காவை பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து விலகிய ஜெயந்தி நடராஜன் வரவிருக்கும் லோக்சபா தேர்தல் பணிகள் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரித்தல் ஆகியவற்றை கவனிப்பார். என்றும் கூறப்படுகிறது.

ஜெயந்தி நடராஜனை பொறுத்தவரையில் இவர் தமிழகத்தில் இருந்து 3 முறை ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக மத்திய அமைச்சர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

அடுத்த பட்டியல் தயார் : 

பல மாநிலங்களின் கட்சி பணிகள் கவனிக்கப்பட வேண்டி இருப்பதால் இன்னும் சில அமைச்சர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட் , ஆனந்த்சர்மா, குலாம் நபி ஆசாத் அடுத்தக்கட்டமாக பதவி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அடுத்த வாரம் நடக்கவிருக்கும் காங்., கூட்டத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Comments